search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tailand Prime Minister"

    • பதவிக்கால வரம்பை பிரதமர் பிரயுத் மீறியிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • துணைப் பிரதமர் பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என செய்தித் தொடர்பாளர் தகவல்

    பாங்காக்:

    தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரின் பதவிக்கால வரம்பை மீறியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கடந்த 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து பிரயுத் ஆட்சியைப் பிடித்தார். அதன்பின்னர் 2019ல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். பிரதமர் பதவி வகிப்பதற்கான வரம்பு 8 ஆண்டுகள் ஆகும். அந்த சட்டத்தை பிரயுத் மீறியிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது, ஆகஸ்ட் 24, 2014 அன்று அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவியேற்றதில் இருந்து நேற்றுடன் 8 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், அவர் சட்டத்தை மீறியிருப்பதாக கூறுகின்றனர்.

    ஆனால், 2017-ல் கால வரம்பு விதியைக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, பதவிக் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரயுத் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

    பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலனைக்கு ஏற்ற நீதிமன்றம், பிரயுத்தை சஸ்பெண்ட் செய்தது. மேலும், புகாரின் நகலைப் பெற்ற 15 நாட்களுக்குள் பிரயுத் தனது வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஆனால் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என கூறவில்லை.

    பதவிக்கால வரம்பு தொடர்பாக சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வெளியாகும் வரை பிரயுத் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதுவரை பிரயுத்தின் நெருங்கிய அரசியல் கூட்டாளியும், ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய அதே ராணுவக் குழுவில் இடம்பெற்றவருமான துணைப் பிரதமர் பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

    அரசியலமைப்பு நீதிமன்றமானது, அரசியல் வழக்குகளில் பொதுவாக அரசாங்கத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளதால், இந்த வழக்கிலும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி நீக்கம் செய்வது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

    ×