search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarakasuran"

    • தாரகாசுரன் எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.
    • தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    ஒருசமயம் தாரகாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம்புரிந்தார். அவனுடைய தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் தாரகாசுரன் முன்னால் தோன்றினார். அவனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான். உடனே தாரகாசுரன் இறைவனை பார்த்து எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.

    இந்த வரத்தை கேட்டதும் சிவபெருமான் இந்த உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் இறப்பு உண்டு. அதனால் இந்த வரத்தை தர இயலாது. வேண்டுமென்றால் இன்னொரு வரம் கேள் என்றார்.

    தாரகாசுரன் சிவபெருமானிடம் எனக்கு மணம் முடிக்காத இளம் மங்கை அகோர முகத்துடன் ஆடை, அணிகலன்கள் எதுவும் இன்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும் என்று கேட்டான். இறைவனாகிய சிவபெருமானும், வரத்தை தந்தோம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    உடனே தாரகாசுரனுக்கு ஒரே மகிழ்ச்சி நாம் வரம் வாங்கிவிட்டோம். இதனால் நமக்கு இப்பிறவில் மரணம் இல்லை என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். இதனால் தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    தாரகாசுரனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரவே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானிடம் சென்று தாரகாசுரனிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய மனைவியான பார்வதிதேவியை பார்த்தார்.

    உடனே பார்வதி தேவியின் மேனியில் இருந்து தனது சாயலுடன் அனல்கொண்ட பார்வையும், ஆங்கார ரூபமும் கொண்ட காளி தேவி பிறந்தாள். இந்த காளிதேவிதான் தாரகாசுரனை அழிக்க புறப்பாட்டாள். அதனைக்கண்ட தாரகாசுரன், தனது உதவியாளரான சண்ட, முண்டாவை காளிதேவியிடம் யுத்தம் புரிய அனுப்பி வைத்தான். அவர்களும் காளிதேவியுடன் யுத்தம் செய்தனர்.

    யுத்தத்தின் போது காளிதேவி தனது வலதுகரத்து வாளால் சண்டனை வெட்ட அவனது உடலில் இருந்து கொட்டிய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அசுரன் தோன்றினான். உடனே காளிதேவி ஆக்ரோஷம் பொங்க தனது சடைமுடியை எடுத்தெறிந்தாள். அதில் இருந்து கருங்காளி தோன்றினாள்.

    அந்த கருங்காளி தேவியை தன்னகத்தே கொண்ட காளிதேவி அகோரம் கொண்டு எழுந்தாள். உடனே அசுரர்கள் நெருங்க நெருங்க ஆயிரம் கண்ணும் கரங்களும் கொண்டவளாய் காளிதேவி ஆயிரம் பேராக நின்றாள்.

    அசுரர்களை வெட்டி வீழ்த்திய காளிதேவி மீண்டும் அசுரர்கள் பிறக்கா வண்ணம் சண்டமுண்டாவை வதம் செய்தாள். சண்ட முண்டாவின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் மண்ணில் விழாதவாறு அது அனைத்தையும் குடித்துவிட்டாள் காளிதேவி. சண்டமுண்டாவை அழித்த பின்னர் தாரகாசுரனை அழித்தாள் காளிதேவி.

    அசுரனை அழித்த மகிழ்ச்சியில் வெறிகொண்டு ஆடினாள் காளிதேவி. இப்படி மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் காளிதேவி, பின்னால் இருக்கக்கூடிய சிவபெருமானை தள்ளிவிட்டு அவர் மீது ஏறி நின்று ஆடினாள்.

    சிறிதுநேரத்தில் தன் தவறை உணர்ந்த காளிதேவி ஞானத்தால் தன்னுடைய நாக்கை கடித்தாள். அதில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த வலியின் காரணமாக நாக்கை வெளியே நீட்டினாள் காளிதேவி. இப்படி அகோர முகமும், கழுத்தில் கபாள மாலையுடன் அட்டகருப்பு நிறத்தில் கருங்காளி தோற்றத்தை தன்னிடம் இருந்து நீக்கிவிட்டாள் காளிதேவி.

    அந்த கருங்காளி தோற்றத்தில் இருந்த காளி ஒரு ரூபமாக வெளியேறி சென்றது. அதன்பிறகு காளிதேவி, சிவபெருமானுடன் நடனம் புரிந்து தில்லையில் வீற்றிந்தாள்.

    காளிதேவியிடம் இருந்து விலகிவந்த நிழல் ரூபமான கருங்காளி தேவி பொதிகை மலைக்கு வந்தாள். அதன்பிறகு நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்தமடையில் கருங்காளி அம்மன் நிலையம் கொண்டு இருக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கவலைகளை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வை தருகிறாள் கருங்காளி அம்மன். நாமும் அவரை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    ×