search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teachers demonstrated"

    அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஸ்டாலின், தினகரன், திருமாவளவன் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    சென்னை:

    ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு வரை அங்கிருந்த அவர்கள், பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.

    தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும், அதை சாப்பிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.

    இதுகுறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆளுங்கட்சியினர் ஆட்சி முடிந்த பிறகு நாட்டில் நடமாட வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை’ என்றார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமியுடன், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் உள்பட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.



    அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ‘ஒரு நபர் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது. எனவே வருகிற 7-ந் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வையுங்கள்’ என தெரிவித்தார். இதில் இடைநிலை ஆசிரியர்களின் நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்தனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் கூறுகையில், ‘அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

    எனவே எங்களுடைய நியாயமான முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை தொடரும் நிலைக்கு அரசு தள்ளி இருக்கிறது’ என்று தெரிவித்தனர். #Stalin #TTVDinakaran #Thirumavalavan
    ×