search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telangana ceo"

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகத்துக்கு தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #TelanganaPolls #eci
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. 

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.
     
    இதன் தொடர்ச்சியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம்  கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  கடந்த 11-ம் தேதி அனுப்பி வைத்தது.

    அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் 4 மாநில தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த தகவலை தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் இன்று மறுத்துள்ளார். 

    இதுதொடர்பாக இன்றிரவு அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர்  ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என இன்றைய நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை. 

    இதுபோல் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் உரிய அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே பிரசுரிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
    ×