search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvadishoolam"

    • கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன்.
    • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இது பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    தல வரலாறு

    ஆதியும் அந்தமுமாகி அனைத்து உலகையும் காத்தருள்பவள், அன்னை ஆதிசக்தி. இவளே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகங்களிலும் தாயாக நின்று உயிர்களை காத்தருளியவள். இதனையடுத்து, நான்காவது யுகமான, கலியுகம் மிகவும் கொடுமைகள் நிறைந்தது.

    இந்த கலியுகத்தின் தீமைகளை உணர்ந்து அச்சம் அடைந்த தேவர்கள், இந்த யுகத்திலும் உலக உயிர்களைக் காத்தருள வேண்டுமென, மீண்டும் ஒருமுறை ஆதிசக்தியிடம் சரண் அடைந்தனர். குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வரும் தாயான ஆதிசக்தி, அதற்கான வழியையும் கூறினாள்.

    "யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே நான், என்னுடைய பரமனுடன் ஒன்றிணைந்து திருவடி பதித்து, எனக்கான இடத்தை தேர்வு செய்துள்ளேன். ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் எழிலார்ந்த அந்த வனத்தில், எம் வருகைக்காக அருவுருவமாக அமர்ந்து தவம் செய்யுங்கள். காலம் கனியும்போது அந்த புனித மண்ணிற்கு இக்கலியுகத்தின் நாயகியாக நான் வருகைபுரிவேன். அங்கே என் விஸ்வரூபக் காட்சியை தங்களுக்கு அருள் பாலிப்பேன்" என்றாள்.

    மேலும் தேவி கூறுகையில், "அத்திருவடி அருட்கோட்டத்தில் நேரில் வந்து என்னை மனமுருகி வழிபட்டு செல்வோருக்கு, ருத்ரனின் திருநீற்று சாம்பலை நான் சிருஷ்டித்த தவசீலர்கள் மூலம் வழங்கி அனைவருக்கும் அருள் தருவேன். அதன் மூலம் அவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் அகற்றுவேன்" என்றாள்.

    இக்கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன் என தேவர்களுக்கு, ஆதிசக்தி அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது. அதன்படி, சிவபெருமானின் திருக்கர செங்கோலை தம் கரம் பற்றினாள்.

    அதன்பின் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை தமதாக்கி, பக்தர்களை ஆட்கொள்ளும் தனித்துவத்துடன் கரிய நாகரூபம் கொண்டாள். தமது திருவிளையாடலுக்காக படைத்த புனிதமான பெண் மணியை தீண்டினாள்.

    இறந்தவளின் சடலத்தில், தான் உள் ஒளியாய் வெளிப்பட்டாள். எரி மயானச் சுடலையில் உதித்தாள். பரம்பரை தெய்வமாய் கலியுக நாயகி கருமாரி என்னும் திருநாமத்தில் நடமாடி வரம் தரும் சக்தியாய், வட வேதாரண்யம் எனும் திருவேற்காடு திருத்தலத்தில் தம் பாதம் பதித்தாள்.

    தம்பு சுவாமிகள் வழியாக திருவாய் மலர்ந்து, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம் எனும் திருக்கோவில் கண்டாள்.

    இந்த கருமாரி தேவியே, தன் அருளாணைப்படி, ஏழு சக்திகளும் ஏழு மலைகளாக காவல் புரியும், மகா ஆரண்யத் திருத்தலம் வந்தாள். அப்போது அங்கே விண்ணுக்கும், மண்ணுக்குமான உயரத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்த ஒளி வெள்ளமாய் பிரகாசித்தாள்.

    அங்கே தேவி விஸ்வரூபக் காட்சி தந்து, தன் திருவடி பதித்த முழு முதற் தலம் இதுவே என்பதை பிரகடனப்படுத்தினாள்.

    ஆதிசக்தி மகாஜோதியாய் காட்சி தந்து அடையாளம் காட்டிய இடம், அன்றைய வேகவதி ஆற்றின் பழங்கால பயணப்பாதை என்பது புவியியல் வரலாறு.

    அங்கே 13 அடி ஆழத்தில் ஆவுடையார் அமைக்க கடைக்காலுக்கு இயந்திரங்களைக் கொண்டு மண் தோண்டப்பட்டது. அப்போது, வேகவதியின் நீரோட்டத்தை உறுதி செய்யும் விதமாக, தோண்டி முடித்தவுடன் நன்னீர் நீரூற்று பொங்கி எழுந்தது. அதில் மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்தது.

    நீருற்றில் குருதியும் கொப்பளிக்க , மூன்று சுவர்ண ரேகைகள் கொண்ட சுயம்புத் திருமேனியாக தேவி தன் பக்தர்களின் கண்முன்னே வெளிப்பட்டாள். இந்த ஆதிசக்தியான, தேவி கருமாரியம்மனே, தன்னை நாடி வந்து வழிபடுவோரின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, வளத்தையும், நலத்தையும் தந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    கோவிலின் தனிச்சிறப்பு

    இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்கு பரிகார பூஜைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அவசியம் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து அம்மனுக்கு நன்றி கூற வேண்டும்.

    இந்த வளாகத்தில், ஒரே கல்லினால் உருவான 51 அடி உயர தேவி கருமாரியின் சிலை, ஒரே இடத்தில் 108 திவ்ய தேசக்கோவில்கள், பய உணர்வுகளைப் போக்கும் பைரவர், நாக தோஷங்கள் நீக்கும் சர்வ கரிய நாக சொரூபிணி ஆலயம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதுதவிர தற்போது, 163 அடி உயர கோடி லிங்கமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இவ்வாலயத்தில் சித்ரா பவுர்ணமி மூன்று நாட்கள், வைகாசியில் மும்முடிசேவை, ஆடி ஞாயிறுக்கிழமை வழிபாடு, நவராத்திரி போன்றவை குறிப்பிடத்தக்க விழாக்களாக உள்ளன. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பசுமையான ஏழு மலைகளுக்கு நடுவில் இத்திருக்கோவில் அமைந்திருக்கிறது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத்தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.

    ×