search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchirappala"

    • வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள்.
    • ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும்.

    கோவில் தோற்றம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு எமதர்ம ராஜா ஆலயம் உள்ளது. ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம். சாதாரண மண் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது பலதரப்பட்ட மக்களின் உதவியோடு, மிகச் சிறப்பான முறையில் கல் கட்டிடமாக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    அன்னை பார்வதி தேவி ஒரு முறை செய்த தவறுக்கு பரிகாரமாக பூலோகம் செல்ல வேண்டிய நிலை வந்தது. பிரகதாம்பாள் என்ற பெயர் பெற்ற சிறு குழந்தையாக பூலோகம் வந்த அன்னையை வளர்க்கும்படி எமதர்ம ராஜாவுக்கு கட்டளையிட்டார், சிவபெருமான்.

    பிரகதாம்பாள் வளர்ந்து பெரியவள் ஆனதும், தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை எமதர்மனுக்கு ஈசனால் விதிக்கப்பட்டது. அதன்படியே அன்னையை வளர்த்து வந்தார், எமதர்மராஜா.

    இந்த நிலையில் பருவ வயதை எட்டிய பிரகதாம்பாளை, சிவபெருமானுக்கு மணம் முடித்து வைக்க தேவர்களும், முனிவர்களும் முடிவு செய்தனர். ஆனால் சிவபெருமானோ நீண்ட தியானத்தில் இருந்தார். அவரை எப்படி தியானத்தில் இருந்து மீளச் செய்வது என்று அனைவரும் ஆலோசித்தனர்.

    சாதாரணமாக போய் அவரது தியானத்தை கலைத்தால், அதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தேவர்களுக்குத் தெரியும். எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமானின் மீது மலர் கணையை தொடுக்கும்படி தேவர்கள் வற்புறுத்தினர்.

    அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்ட மன்மதனும், திருச்சிற்றம்பலத்திற்கு மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரில் இருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார். தியானம் கலைந்ததால் கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார்.

    இதனால் பதறிப்போன ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். ஆனால், "மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. வேண்டுமானால் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது, ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்" என்று கூறி அருளினார் சிவபெருமான்.

    மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்தில் இருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே எமதர்மனுக்கு கோவில் அமைத்து வழிபடும் முறை வழக்கத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

    வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே எம தீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொண்ட ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.

    கோவிலின் சிறப்புகள்

    ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில், இத்தல எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை, எமதர்மனின் காலடியில் வைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.

    பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றி இருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாட்களிலேயே பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாம்.

    எமபயத்தை போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி, நவக்கிரக தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் போன்றவற்றிற்கும் பரிகார தெய்வமாக இவ்வாலயத்தில் அருளும் எமதர்மராஜா விளங்குகிறார்.

    நாளுக்கு நாள் இந்தக் கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதன் திருவிழாவும் நடக்கும்.

    எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சிற்றம்பலம்.

    ×