என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiruvathigai"
- இந்த ஊருக்கு ஈசன் அருள் அதிகம் கிடைத்ததால் திருவதிகை என்ற பெயர் ஏற்பட்டது.
- சிவபெருமான் தேரில் வந்ததால் கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
1. எல்லா ஊர்களையும் விட இந்த ஊருக்கு ஈசன் அருள் அதிகம் கிடைத்ததால் இந்த ஊருக்கு ''திருவதிகை'' என்ற பெயர் ஏற்பட்டது.
2. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் ''அதியரைய மங்கலம்'' என்று அழைக்கப்பட்டது.
3. முதலாம் ராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராச மங்கலம்'' என்று பெயர் பெற்றது.
4. முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராமங்கலியபுரம்'' என்று பெயர் மாறியது.
5. விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் ''திருவதிகை நாடு'' என்ற பெயரில் இந்த ஊர் ஒரு சிற்றரரசரின் தலை நகரமாக இருந்தது.
6. சேர மன்னர்களில் ஒரு பிரிவினர் ''அதிராசர்'' என்றழைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மன்னர்தான் இந்த கோவிலை கட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7. திருநாவுக்கரசர் இத்தலத்தில் 16 தேவார திருப்பதிகங்கள் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர் இருவரும் தலா ஒரு பதிகம் பாடி உள்ளனர். ஒரு பத்கம் என்பது 10 பாடல்களைக் கொண்டது.
8. சீர்காழி (71) திருவாரூர் (33) தலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக தேவார பாடல்கள் பெற்ற மூன்றாவது திருத்தலமாக திருவதிகை தலம் உள்ளது.
9. புறநானூறு, கலித் தொகை ஆகிய சங்க கால நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் திருவதிகையில் சிவபெருமான் முப்புரம் எரித்த வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது.
10. சிவபெருமான் தன் சிரிப்பால் முப்புரத்தையும் எரித்து அழித்த சம்பவம் தில்லைக் கலம்பக பாடல்களில் இனிமையாக காட்டப்பட்டுள்ளது.
11. மாணிக்க வாசகர் இத்தலத்துக்கு வந்து பதிகம் எதுவும் பாடி பதிவு செய்யவில்லை. என்றாலும் சிவபெருமான் முப்புரம் அழித்ததை புகழ்ந்து பாடியுள்ளார்.
12. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் வில் ஏந்திய கோலத்தில் இருந்தார். அதே கோலத்தில் ஈசனை திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி, தஞ்சை பெரிய கோவில் ஆகிய கோவில்களிலும் தரிசிக்கலாம்.
13. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் உக்கிரம் கொண்டு ஆடினார். அந்த ஆடலுக்கு கொடுகொட்டி, பாண்டரங்கம் என்று பெயராகும்.
14. சுவாமி வீரட்டானேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் காட்சியளிப்பது போல கோவில் தூண்கள் முழுவதும் 16 பட்டைகளுடன் விளங்கிறது.
15. இத்திருக்கோவிலில் பூமியில் நிழல் விழாதபடி கணித முறைப்படி கர்ப்பகிரக விமானம் கட்டப்பட்டுள்ளது.
16. திருநாவுக்கரசர் இத்தலத்தில் பாடிய தேவார பாடல்களின் பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்ஹார நிகழ்ச்சியை
பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது.
17. சிவபெருமான் தேரில் வந்ததால் இத்திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
18. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும்.
19. இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
20. அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக நடக்கும்.
21. தீராத வயிற்றுவலி இத்திருக்கோவிலில் திருநீறும், சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக நோய் தீர்ந்துவிடும்.
22. குழந்தை பேறு இல்லாதவர்கள் அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்தப் பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.
23. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவோருக்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி.
24. மாதந்தோறும் பவுர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
25. திருக்கோவில் ராஜகோபுர வாசலில் 108 நாட்டியங்களை விளங்கும் சின்முத்திரையுடன் கூடிய சிற்பங்களை கருங்கற்கலால் செதுக்கப்பட்டுள்ளது.
26. 63 நாயன்மார்களின் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
27. திருவாதிரை அன்று சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களில் ஸ்ரீபைரவர் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
28. ஞாயிறு அன்று ஐந்தெழுத்து வேள்வி நடத்தபடுகிறது.
29. திங்கட்கிழமை சோமாவார வழிபாடு நடக்கிறது.
- உலகத்து அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
- சமய பெரியவர்கள் திருவதியை, தஞ்சை பெரிய கோவிலின் தந்தை என்று வர்ணிப்பதுண்டு.
தஞ்சை பெரிய கோவிலை நாம் உலகத்து அதிசயங்களில் ஒன்று என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தஞ்சை கோவில் கோபுரம் கம்பிரமாக நிற்பதை கண்டு நாம் பெருமையும், ஆச்சரியமும் கொள்கிறோம்.
ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் மிகப் பிரமாண்டமாக, உலக அதிசய சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்கு அடிப்படையாக இருந்தது திருவதிகை கோவில்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. திருவதிகை கோவில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட ராஜராஜசோழன், சோழ மண்டலத்தில் இப்படியரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.
எனவேதான் சமயப் பெரியவர்கள் திருவதியை திருத்தலத்தை தஞ்சை பெரிய கோவிலின் தந்தை கோவில் என்று வர்ணிப்பது உண்டு.
ஆலய அமைப்பு, கருவறை அமைப்பு, லிங்கம் அமைப்பு உள்பட பல விஷயங்களில் திருவதிகை திருத்தலம் போலவே தஞ்சை பெரிய கோவிலும் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவதிகை கோவிலின் கருவறை ராசசிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தேர் போன்று இருக்கிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் மாடகோவில்கள் இருக்கின்றன.
இந்த மாடகோவில்களில் நான்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மூன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது ஐந்து நிலைகளை உடையது.
மேல் நிலையில் விமானம் பண்டியல் எண் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்களிலும் அட்ட திக்கு பாலகர்களின் சுதை உருவம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு நிலைகளிலும் நான்கு புறமும் சிவனின் வடிவங்களும், விஷ்ணுவின் வடிவங்களும், பிரம்மாவின் வடிவங்களும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன.
கல்காரம் எனப்படும் கீழ்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களிலும் சுதை உருவங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மாடக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளின் உருவம் சுதையாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கம் உள்ள மாடகோவிலில் நந்திதேவன், ஊர்மிளா, சுதை உருவமும், மற்றொன்றில் பஞ்சமூக சிவனும், பார்வதியும் சுதை உருவங்களாக உள்ளன. இவை இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன.
இவற்றின் வெளிப்பக்கத்தில் திரிபுர சம்கார மூர்த்தியும், மீனாட்சி கல்யாணமும், சந்திரசேகரர் உருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. மேலும் சிவன், யானையைத் தோலுரித்ததும், பிச்சாண்டவர் திருவுருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலும் இணைக்கப்பட்டுள்ளது.
மாடக்கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணுவும், மையத்தில் லிங்கோர்ப்பவரும் பக்கத்தில் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணுவின் வடிவங்கள் சுதைகளாக உள்ளன.
வடக்கு பக்கம் மாடக்கோவில்களில் கிழக்கு நோக்கி பிரம்மாவின் உருவமும், சிவன், பார்வதி உருவமும் அமைந்துள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் ராவணன் கைலாய மலையைத் தூக்கி யாழ்மீட்டிய நிகழ்ச்சியும், உமாமகேஷ்வரர் உருவமும் சுதையாக அமைந்துள்ளன.
இந்த மாடகோவில்களின் வெளிபக்க மூலைகளில் அரிமாக்கள் நின்றவாறு முன்னங்கால்கள் தூக்கிய நிலையில் நின்றுள்ளன.
முதல் நிலையில் நான்கு புறமும் ஒற்றை திருவாட்சிகள் இருக்கின்றன. மூலவருக்குப் பின்னால் உமா மகேஸ்வரரின் சுதை உருவமும் நின்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் உள்ளே சுற்றி வரும் சாலகார வழி இருந்துள்ளது. தற்போது இது அடைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு போன்று காஞ்சி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் காணலாம். திருவதிகைக்குப் பின்னரே இந்த கோவில்கள் கட்டப்பட்டன.
- திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
- இக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.
இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலக படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.
இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதை கண்டார்.
தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார்.
திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்து போர் புரிந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள்பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம்பெற்றிருந்தனர்.
திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதை கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.
(இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.
தேவியை கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் `சிரித்தேன் எரித்தேன்' என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்க புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.
அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.
சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.
அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி `வேகாகொள்ளை' என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொல்லை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்