search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMC members"

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
     
    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

    மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் இவ்விவகாரத்தை மையப்படுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். மத்திய அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து அவர்கள் பேசினர்.



    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கண்டிக்கும் வகையில் பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு மேல் பாராளுமன்றம் கூடியபோதும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
     
    ×