search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist bus collapsed"

    தேவகோட்டை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    தேவகோட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ளது பாறசாலை. இந்த பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சுற்றுலாவாக புறப்பட்டனர். பாறசாலையை சேர்ந்த ஷியாம்குமார் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.

    ஊட்டி, பழனி பகுதி களுக்கு சென்றுவிட்டு நேற்று சுற்றுலா பஸ் வேளாங்கண்ணிக்கு வந்தது. அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள தாவூத்து மாதா கோவிலுக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்புதூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புலிக்குட்டி கிராம பகுதியில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் அங்கிருந்த கால்வாய் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருவேகம் புதூர் போலீசார் விரைந்து சென்றனர். காயம் அடைந்த சந்திரன் (48), சுதாகரன் (60), இருதயம்மாள் (80), வினிஸ் (14), தங்கையன் (55), அருண்போஸ் (24), ஸ்டீபன் (45), சிராஜ் (31), அஜி (32), அப்புக்குட்டன் (78), ஜெயக்குமாரி (55), லீசாமோல் (29), சரசா (56) உள்பட 16 பேர் மீட்கப்பட்டு காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்படடது. இவர்களில் சந்திரன், சுதாகரன், இருதயம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) மனோகர், திருவேகம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணிசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சுற்றுலா பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
    பெரம்பலூர்:

    புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியது. தொடர்ந்து பஸ் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல் ஓடி தடுப்புகம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக் கிடையே சிக்கி தவித்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×