search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train dog"

    20 மணிநேரம் ரெயிலின் மேற்கூரையில் நாய் ஒன்று மின் கம்பியின் நடுவே பயணம் செய்து உயிருடன் மீண்ட சம்பவம் பயணிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    கொழிஞ்சம்பாறை:

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நாய்க்கும் திடீரென்று அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது.

    மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் ரெயில்களில் ஏறி சொகுசாக செல்கிறார்கள். அவர்களுடன் ரெயிலுக்குள் ஏறினால் அடித்து விரட்டி விடுவார்கள் என்று நினைத்து இருக்கிறது.

    ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் மீது ஏறி மேற் கூரையில் நின்று கொண்டது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஹாயாக அங்கும் இங்குமாக உற்சாகமாக ஓடி விளையாடியது.

    ரெயிலின் ஒரு பெட்டியில் கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுராஜ், வினோஸ் ஆகியோர் பயணம் செய்தனர். ரெயிலின் மேற்கூரையில் ஏதோ நடமாடுவதுபோல் உணர்ந்தனர்.

    அடுத்த ரெயில் நிலையம் வந்தபோது இருவரும் இறங்கி ரெயிலின் மேற்கூரையை பார்த்தனர். அப்போது ரெயிலின் மேற்கூரையில் நாய் நின்றதை பார்த்ததும் விரட்ட முயன்றனர். ஆனால் நாய் செல்லாமல் வீரர்களை கடிக்க முயன்றது. அதற்குள் ரெயிலும் புறப்பட்டு விட்டது. இதையடுத்து அடுத்த ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அடுத்த ரெயில் நிலையம் வந்தபோது ரெயில்வே ஊழியர்கள் நாயை விரட்ட முயன்றனர். ஆனால் நாய் கடிக்க பாய்ந்ததே தவிர அங்கிருந்து செல்லவில்லை. இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் ரெயில் புறப்பட்டது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் இப்படியே நாயை விரட்ட சிறிது நேரம் ரெயிலை நிறுத்தியும் நாயை விரட்ட முடிய வில்லை.

    ரெயில் வேகமாக வரும்போது இரு பெட்டிகளுக்கு இடையே நாய் லாவகமாக பதுங்கிக்கொண்டது. மெதுவாக செல்லும்போது மேற்கூரையின் மீது ஏறியது.

    ஒருநாள் முழுவதும் பயணம் செய்தது. மறுநாள் காலை 10.30 மணிக்கு பாலக்காடு ஒலவக்கோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. மொத்தம் 1100 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரமாக ரெயில் பெட்டியின் மீது பயணம் செய்துவிட்டது.

    அங்கிருந்து கேரளா செல்லும் பாதையில் மிக உயரழுத்த மின் கம்பிகள் இருப்பதால் இனிமேல் பயணம் செய்தால் நாய்க்கு ஆபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனையடுத்து ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் வினோஸ் லாவகமாக மேற்கூரையில் இருந்த நாயின் காலை பிடித்து கீழே போட்டார். இதில் நாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது.

    இதனால் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 10.30 மணிக்கு புறப்படவேண்டிய ரெயில் 11.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    20 மணிநேரம் ரெயிலின் மேற்கூரையில் நாய் ஒன்று மின் கம்பியின் நடுவே பயணம் செய்து உயிருடன் மீண்ட சம்பவம் பயணிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. #tamilnews

    ×