search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trees felled"

    ரிஷிவந்தியத்தில் சூறாவளி காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 5 மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த சூறாவளி காற்றினால் சங்கராபுரம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள அத்தியூரில் பெரிய மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், ராஜாராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுரோடு வழியாக ஏந்தல் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பஸ்சின் முன்னால் புளிய மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாணாபுரம் கூட்டு சாலை டாஸ்மாக் கடை முன்பு இருந்த 3 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மரத்தின் அடியில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

    மேலும் ரிஷிவந்தியம், சங்கராபுரத்தை அடுத்த எஸ்.குளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறை காற்று வீசியது. இதனால் நெல் பயிர்கள் மற்றும் கரும்புகள் சேதம் அடைந்தன.

    திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கூட்டேரிப்பட்டு, ஒலக்கூர், மயிலம், கோனேரிக்குப்பம், எண்டியூர், தென்கோடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக கொட்டியது.

    இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் மின்னல் தாக்கி செத்தன. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது.

    ×