search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine election"

    உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார். #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
    கீவ்:

    கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.

    அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக மாறினார்.

    தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுபடுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.



    இதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 2-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார்.

    பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.

    அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

    கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

    இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

    இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

    அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.  #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
    உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், அவர் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
    கீவ்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (வயது 41) என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

    உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒரு வேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.



    அதன்படி, நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பெட்ரோ போரோஷெங்கோ, வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும் ஜெலன்ஸ்கிக்கு சாதகமாகவே இருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார்.

    70.33 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 73 சதவீத வாக்குகளை ஜெலன்ஸ்கி பெற்று பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் பெட்ரோ போரேலாஷெங்கோ 24.66 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார். எனவே, ஜெலன்ஸ்கியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

    ஆனால், நேற்று இரவில் இருந்தே ஜெலன்ஸ்கி  மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஜெலன்ஸ்கி, தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என கூறினார். #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy

    ×