search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US school shooting"

    அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ந் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி சபிகா உடல், கராச்சி நகருக்கு வந்து சேர்ந்தது. #SchoolShooting #Karachi #StudentSabika
    கராச்சி:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18-ந் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த அவரது உடல், கராச்சி நகருக்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    சபிகாவின் உடல் விமான நிலையத்தில் இருந்து, குல்ஷான் இ இக்பால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்னர் கராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஜூன் மாதம் 9-ந் தேதி சபிகா ஊருக்கு வருவார் என குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த நிலையில், அவருக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டுவிட்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #SchoolShooting #Karachi #StudentSabika
    ×