என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakosamangai Temple"

    • ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை.
    • நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற பகுதியில், மரைக்காயர் என்ற மீனவர் தனது வறுமை நீங்க மங்களநாதரை தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளி காற்று அடித்து அவருடைய படகு திசை மாறிப்போனது.

    அப்படியே வெகு தூரம் சென்ற பிறகு ஒரு பாசி படர்ந்த பாறையின் மீது மோதி நின்றுவிட்டது. அந்த பாறை அப்படியே சரிந்து படகின் உள்ளே விழுந்துவிட்டது.

    அதே வேளையில் கடலில் சுழன்று வீசிய சூறாவளி காற்றும் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் இருந்து மீண்ட மரைக்காயர் கரைக்கு திரும்பி வர பார்த்தால், அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியவில்லை.


    மங்களநாதரை நினைத்து படகை செலுத்தி மிகவும் சிரமப்பட்டு பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒரு வழியாக தனது ஊரான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

    கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு அவரை பார்த்ததும் தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டுவந்த பாசி படர்ந்த கற்களை என்னவென்று தெரியாமல் தனது வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர்.

    அந்த கல்லின் மேல் நடந்து நடந்து நாளைடைவில் அந்த கல்லின் மேல் ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு பளபளவென்று மின்னியது.

    இது வறுமையில் வாடிய தனக்கு ஈசன் மங்களநாதர் கொடுத்த பரிசு என்று நினைத்த மரைக்காயர், அந்த மின்னும் பச்சை பாறையை அரசருக்கு அன்பளிப்பாக தந்தால் தனது வறுமை நீங்கும் என்ற எண்ணத்தில் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் கூறி தன் வீட்டில் ஒரு பெரிய பச்சை கல் உள்ளது என்று அரசரிடம் சொன்னார்.

    அரண்மனை பணி ஆட்கள் பச்சை பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காண்பித்தனர். கற்களைப் பற்றிய விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்.

    சோதித்தவர் ஆச்சரியத்துடன் "இது விலைமதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது" என்று கூறினார். உடனே மன்னரும், மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.


    இவ்வளவு அருமையான கல்லிலிருந்து ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடி கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி அரசர் ஓலை அனுப்பினார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சிற்பியும் வந்து சேர்ந்தார்.

    அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் ஆச்சரியத்தில் மயங்கியே விழுந்துவிட்டார், "என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா" என்று கூறிவிட்டு இலங்கைக்கே திரும்பி சென்றார்.

    மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்பாக நின்று மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் என்று சித்தர் சண்முக வடிவேலர் கூறினார்.

    அதனை காதில் கேட்ட மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

    அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர். இவ்வாறுதான் மரகத நடராஜர் சிலை உருவானது என சொல்லப்படுகிறது.

    • ராமாயண காலத்திற்கும் முந்தையது’ என்றும் சொல்லப்படுகிறது.
    • ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் இங்கு தான் நடந்துள்ளது.

    உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.

    உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும், அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.


    இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.

    இந்த கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. எனவே நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோவில் இது என்று அறியப்படுகிறது.


    இந்த கோவிலின் பழமையை குறிக்கும் விதமாக "மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    ×