search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velvi Puja"

    • ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா.
    • அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    சென்னை:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புவிற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டார்.

    ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பங்காரு அடிகளாரின் திரு வுருவப்ப டத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

    நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது.

    பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் பொது பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.

    இன்று மாலை மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது.

    • அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    ×