search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkatampettai Venugopalan"

    • சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
    • மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.

    கோவில் தோற்றம்

    இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

     நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

     புராண வரலாறு

    கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.

    அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.

    பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

    பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.

    தொன்மைச் சிறப்பு

    தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.

    செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.

    கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

    மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.

    கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.

    மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.

    இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.

    ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    ×