search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi Constituency"

    • விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

    இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. நாளை விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
    • வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.

    எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.

    நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

    1 லட்சத்து 43 ஆயிரத்து 33 முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.314.67 கோடி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்குத் தீர்வு , சுயதொழில் தொடங்கிட கடன் ரூ.1,388.67 கோடி, 16ஆயிரத்து 128 மகளிர்க்கு சுயஉதவிக்குழு கடன் ரத்து ரூ.24.43 கோடி, 20 ஆயிரத்து 799 குடும்பங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி , 30ஆயிரத்து 798 பேருக்கு உழவர் பாது காப்புத் திட்ட ஓய்வூதியம் ரூ.67.75 கோடி, 3 ஆயிரத்து 781 ஏழைப் பெண்களுக்கு 14.66 கோடி திருமண நிதியுடன், ரூ.16.52 கோடி மதிப்பில் 30.248 கிலோ தங்க நாணயங்கள், புதுமைப் பெண் திட்டத்தில் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, என வழங்கி மக்களைக் காக்கும் மகத்தான அரசாக திகழ்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும், சீர்மரபினருக்கும் 1989-ல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதனால் 1988-1989-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990-ல் 187 ஆக உயர்ந்தது.

    இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990-ல் 685-ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.

    இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998-ல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது தி.மு.க. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் தி.மு.க.தான்.

    அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் தி.மு.க.தான்.

    ராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

    காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார்.
    • ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரசார மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட சட்டசபை செயலகம் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதி காலியிடமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக அரசிதழிலும் இன்று வெளியிடப்படுகிறது.

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுபற்றி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியவுடன் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    ×