என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » water
நீங்கள் தேடியது "water தண்ணீர்"
நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம்.
ஒருகுடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சாம் என்று சிறுவர்களால் பூத்துக் குலுங்கிய தெருக்கள் இன்று தண்ணீர் லாரிகளுக்காகத் தவமிருந்து கொண்டிருக்கின்றன.
நம் உடல் 75 சதவீதம் நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. தாயின் தண்ணீர்க் குடத்தில் மிதந்து பிறந்து பொத்தல் செய்யப்பட்ட நீர் நிறைந்த மண்குடத்தோடு நம் வாழ்வை முடிக்கிறோம். உலகம் 97 சதவீதம் உப்பு நீர் நிறைந்த கடலால் சூழப்பட்டிருக்கிறது. 2 சதவீதம் தண்ணீர் உறைபனிப்பாறைகளுக்குள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய ஒரு சதவீதம் நல்ல தண்ணீரைத் தான் இந்த உலகில் வாழும் கோடிக் கணக்கான மக்கள் குடி தண்ணீராகப் பயன்படுத்துகின்றனர்.
முன்பு ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு வந்தால் ஆறுவகை அன்னங்களோடு ஆறு, அருவி போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று வயிறார உணவு உண்டு அந்தத் தண்ணீரை இருகைகளால் அள்ளிப்பருகி வீட்டிற்கு வருவோம். இன்று அப்படிச் செய்ய முடியுமா? இருபது ஆண்டுகளுக்குள் குடிதண்ணீரைப் பெரும் லாபம் தரும் விற்பனைப் பொருளாக மாற்றியது யார்? அறிவியலில் முன்னேறிவிட்டோம் என்று நாம் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க குடிதண்ணீருக்காக மக்கள் பல மைல்தூரம் தலையிலும் கையிலும் குடங்களோடு நடப்பதைக் காண்கிறோம்.
நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 500 அடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. உணவு உண்டுவிட்டு நாம் கைகழுவும்போது திறக்கப்படும் தண்ணீர் குழாய்களால் ஒவ்வொரு முறையும் இரண்டு லிட்டர் நன்னீர் வீணாகிறது. வெஸ்டர்ன் கழிவறைகளால் ஒவ்வொரு முறையும் பத்துலிட்டர் நீர் கழிவுத்தொட்டிக்கு வீணாகச் சென்று சேர்கிறது. துணிதுவைப்பு எந்திரம் ஒவ்வொரு முறையும் இருபது லிட்டர் தண்ணீரைச் சோப்புக் கழிவுடன் வெளியேற்றுகிறது.
சரிவரப் பராமரிக்காத தண்ணீர் குழாய்களிலிருந்து சொட்டும் தண்ணீர் ஒருநாளைக்கு ஒரு வாளி வீணாகிறது. கவனமில்லாமல் தண்ணீர் மோட்டரை இயக்குவதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருமுறைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் தரையில் கொட்டி வீணாகிக்கொண்டிருக்கிறது. முன்பு வாளியில் தண்ணீர் நிரப்பி பாத்திரங்களைக் கழுவிய நாம் தண்ணீர் குழாய்களை அருவியாய் திறந்துவிட்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறோம். குளியலறை ஷவர்களால் ஒவ்வொரு முறையும் நான்குவாளி தண்ணீர் வீணாகிறது.
நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம். தமிழகத்து நதிகள் யாவும் வறண்டு ஒருதுளி நீரின்றி வற்றிக்கிடக்க இந்த சுட்டெரிக்கும் கோடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் பொதிகை மலையின் காரையார் எனும் மலைப்பகுதிக்குச் சென்றபோது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணித் தண்ணீரை வாகனங்களைக் கழுவியும் உண்ட உணவுப்பொருட்களின் மீதத்தை நதியில் கொட்டியும் சோப்புபோட்டு துணிகளைத் துவைப்பதையும் காணமுடிந்தது.
மின்சாரத்திற்கு மீட்டர் வைத்து செலவழித்த அளவுக்கு மின்கட்டணம் செலுத்துவதுபோல் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் பணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
எல்லாப் பயணங்களும் ஒரு தனிமனிதனின் காலடித் தொடக்கத்திலிருந்துதான் தொடங்குகிறது. சமுதாயம் மாற முதலில் நாம் மாறவேண்டும், சிறுதுளிதான் பெரு வெள்ளமாகிறது. ஊர்கூடினால் தண்ணீரைப் பெருமளவு சேமித்து விடமுடியும். கர்மவீரர் காமராஜர் செய்ததுபோல் தமிழக ஆறுகளில் மழைக்காலத்தில் பெருகி வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை புதிய அணைகள்கட்டி சேமித்து மக்களுக்குத் தேவையான காலங்களில் வழங்கவேண்டும். நாம் வீணாக்காமல் சேமிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீரும் அடுத்ததலைமுறைக்கு நாம் தரும் சொத்து என்பதை உணர்வோம்.
முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X