என் மலர்
நீங்கள் தேடியது "West Indies won"
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது.
நாட்டிங்காம்:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பகார் ஜமான், பாபர் ஆசம் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர். வகாப் ரியாஸ் 18 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கெயில் வலுவான அடித்தளம் அமைத்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோப் 11 ரன்களிலும், பிராவோர ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த பூரன்-ஹெட்மயர் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 34 ரன்களுடனும், ஹெட்மயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.