என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Health"

    • நம்மால் தவிர்க்கக் கூடிய புற்றுநோய் என்றால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான்.
    • உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    மனித உடலில் நகம், முடி தவிர்த்து எல்லா உறுப்புக்களிலும் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் நம்மால் தவிர்க்கக் கூடிய புற்றுநோய் என்றால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதற்கு தடுப்பூசி உள்ளது.

    பெண்கள் பருவ வயதை அடையும் போதும், கருத்தரிக்கும் போதும் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்படலாம். ஆரம்ப நிலை புற்றுநோய் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாது. கொஞ்சம் பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம். மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம்.

    பொதுவாக நம்முடைய உடலில் செல்கள் தோன்றி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதியில் செல்கள் உற்பத்தியாகும். ஆனால் அவை மறைவது இல்லை. இதனால் மிக அதிக அளவில் செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நாளடைவில் இந்த செல்கள் உருவாக்கம் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்கிறோம்.

    இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறியலாம்.

    பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது, வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, புகைப்பழக்கம், போதை பழக்கம் ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க முடியும். மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும். மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

    • கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும்.
    • கர்ப்ப காலத்தில் பல பெண்கள் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள்.

    பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்தைக் கொண்டுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் நீட்டித்த தழும்புகள், அரிப்பு, பருக்கள், நிறமி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தோல் தளர்த்தல் போன்ற பல தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    பருக்கள்: பருக்கள் பிரச்சனை கர்ப்பிணிக்கு மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை. பல பெண்களுக்கும் தடிப்புகள் ஏற்படுகின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பு சருமத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் துளைகளை நிறுத்துகிறது. கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும். பல பெண்களுக்கு அவை முகம் முழுவதும் பரவுகிறார்கள். இவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவை பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கும். சில நேரங்களில் இந்த தழும்புகளும் எஞ்சியிருக்கும். எனவே, மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வீட்டில் எந்த சிகிச்சையும் செய்ய வேண்டாம். இவற்றின் சிகிச்சைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெலஸ்மா: இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மிகவும் கடுமையான தோல் பிரச்சினை, இது கர்ப்ப முகமூடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில், முகத்தில் நிறமி ஏற்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிப்பாடு, பரம்பரை மற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

    அரிப்பு: வாய்வு காரணமாக கர்ப்ப காலத்தில் தசைகளில் நீட்சி ஏற்படுகிறது, இதன் காரணமாக பல பெண்களுக்கு அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள். எனவே, இதைத் தவிர்க்க, கலமைன் லோஷன் அல்லது நல்ல தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அரிப்பு அதிகமாக இருந்தால் ஒரு மருத்துவரை அனுகவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொந்தரவுகளாலும் இது ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    நீட்டித்த தழும்புகள்: குழந்தையின் வளர்ச்சியுடன் வயிற்றுத் தோல் நீட்டப்படுகிறது, இதன் காரணமாக சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் மீள் இழைகள் உடைக்கப்படுகின்றன. இதன் விளைவாக நீட்டித்த தழும்புகள் உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிக்கும் பெண்கள் இந்த பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இந்த சமையத்தில் 11-12 கிலோ எடை அதிகரிப்பு சாதாரணமானது, ஆனால் சில பெண்களுக்கு 20 கிலோ வரை அதிகரிக்கும். இது சருமத்தில் கூர்மையான நீட்டிப்பை ஏற்படுத்துகிறது, இது நீட்டித்த தழும்புகள் பெறும் அபாயத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம், ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

    குறிப்பு : மருத்துவம் தொடர்பான எந்தொரு முயற்சியை மேற்கொள்ளும் போதும் உங்கள் மருத்துவரை அனுக மறக்காதீர்...

    • பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
    • சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

    இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

    நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

    சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர்.

    மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

    • மாதவிடாய் கப் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாது.
    • பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய்க் காலப் பயன்பாட்டுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய வரம், இந்த மாதவிடாய் கப் என்று கூறலாம். பார்ப்பதற்கு சிறிய அளவிலான கப் போன்று இருக்கும் இந்த மாதவிடாய் கப் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

    சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கப், பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாத வகையிலே தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய பின் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், மறுமுறை பயன்படுத்தலாம். பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுத்தப்படுத்துவதால் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை.

    சிறுநீர் வெளிவரும் வழி, இனப்பெருக்க வழி, மலத்துளை இவை மூன்றையும் தசை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்தினால் தசைத் தளர்வால் அது இறங்கிவிடும் என்ற அச்சம் தேவையற்றது.

    காப்பர் டீ உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது.

    எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

    நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்தவேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

    பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதனை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல, ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும்.

    மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

    மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தும்போது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை எடுத்துச் சுத்தப்படுத்தி மறுபடி பயன்படுத்துங்கள். நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய அலர்ஜி இதில் ஏற்படாது.

    ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் போது காயம் தவிர்க்க விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • தினமும் குளிப்பது மிக மிக முக்கியம்.
    • ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    உணவு கருவுற்ற பெண் மூன்று 'G' நிறைய சாப்பிட வேண்டும்.

    Green leaves - கீரை வகைகள்

    Green vegetables - பச்சைக் காய்கறிகள்

    Grains - முழு தானியங்கள்

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது.

    கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    புத்துணர்ச்சியையும் தரும்.

    அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

    • இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
    • ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது.

    ரத்தச்சோகை என்பது என்ன?

    ரத்தச்சோகை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன் சிவப்பணுக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்வதுதான் சிவப்பணுக்களின் வேலை. இந்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கை குறைந்தாலோ, அவற்றின் வடிவம் மாறினாலோ அல்லது அவற்றுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் ஹீமோகுளோபினின் செறிவு குறைந்தாலோ அதை ரத்தச்சோகை என்கிறோம்.

    இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. உலகளவில் இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் `அனீமியா' எனப்படுகிற ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது. கர்ப்பிணி களில் 40 சதவிகிதம் பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவிகிதத்துக்கும் மேலாகவும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தகவலையும் அந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது.

    சாதாரண களைப்பு, அசதி போன்ற அறிகுறிகளுடன் எட்டிப்பார்க்கும் அனீமியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு உங்களை அழைத்துச்செல்லலாம்.

    அறிகுறிகள்

    அதிகமான உடல் சோர்வு

    பலவீனம்

    தலைச்சுற்றல்

    மூச்சுத்திணறல்

    சருமம் வெளிறிப்போவது

    சிறு குழந்தைகளிடம் காணப்படும் பசியின்மை, எடைக்குறைவு, வளர்ச்சியின்மை, எளிதில் சோர்ந்துபோவது, படிப்பில் கவனமின்மை.

    பொதுவாக 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் அந்த வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு காலம் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சோம்பல், உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் வெளிர் நிறத்துக்கு மாறுதல் போன்ற ரத்தசோகைக்கான அறிகுறிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

    ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ரத்த சோகைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும். 20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீத பேர் இரும்புச்சத்து குறைபாடு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது ஆய்வுக்குட்டப்பட்ட 17 லட்சம் பெண்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    "இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களை கூடுதலாக உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை போக்கலாம். ஆனால் இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.

    படித்த இளம் பெண்கள் கூட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் அழுக்கு படிந்த பொருட்களை சாப்பிடுவது, வளர்ந்து ஆளான பிறகும் கூட களிமண் போன்ற மண் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது கூட ரத்தசோகைக்கு காரணமாக இருக்கிறது. ரத்தசோகை குணமானவுடன் இந்த சுபாவம் மறைந்துவிடும்.

    ரத்தப்போக்கும், இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மையை உடல் இழப்பதும் ரத்தசோகைக்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ரத்தசோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 80 வயதுக்குட்பட்ட பெண்களில் 73 சதவீதம் பேர் ரத்தசோகை பாதிப்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் 10 வயதுக்குட்பட்ட 40 சதவீத சிறுமிகள் ரத்தசோகை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    • கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள்.
    • குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது.

    ஆழ்ந்த உறக்கம் பசித்தன்மையை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். அதே நேரத்தில் தூக்கமின்மை அதிகம் சாப்பிட வைத்துவிடும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று இப்படி ஒரு முடிவைத்தருகிறது. அதுவும் பெண்களுக்கு.

    சரியாக தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளதாம்.

    கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள். சரியாகத் தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

    7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.

    • குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன.
    • சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.

    அந்த காலத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள், குழந்தை வேண்டி அரச மரத்தை சுற்றுவார்கள். சில தம்பதியர் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்கள். இது இன்னும் வழக்கத்தில் இருந்தபோதிலும், செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்பத்திரிகளையும், செயற்கை கருத்தரிப்பு மையங்களையும் பெண்கள் தற்போது நாடுகிறார்கள். ''தங்கள் குழந்தை, தங்கள் ரத்தம்'' என்ற உணர்வே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    அத்துடன் 'பதிலித்தாய்' எனப்படும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கும் சமீப காலமாக அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.

    அது என்ன வாடகைத்தாய் முறை?...

    ''ஒரு பெண், விருப்பப்பட்டு முன் வரும் ஒரு தம்பதியின் குழந்தையை சுமந்து, அதை பெற்றெடுத்த பின் அந்த தம்பதியிடம் ஒப்படைக்கும் நடைமுறைக்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை'' என்று சட்டம் சொல்கிறது.

    எளிமையாக சொல்வது என்றால், பஸ் நிலையத்திலோ, ரெயில் நிலையத்திலோ நம்மால் தூக்கிச்செல்ல முடியாத சுமையை சுமந்து செல்ல கூலித் தொழிலாளியை அமர்த்துகிறோம் அல்லவா? அதுபோல் தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியர், தங்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வதற்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை.

    இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

    * குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன. ஒரு பெண்ணின் கருப்பை கருவை தாங்கும் சக்தியின்றி பலவீனமாக இருந்தால், அந்த பெண்ணின் கருமுட்டையையும், அவரது கணவரின் உயிரணுவையும் எடுத்து சேர்த்து கருவை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் வாடகைத்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருப்பையில் வைத்து விடுவார்கள். அங்கு குழந்தை வளரும். அந்த பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்ததும், அவரது வேலை முடிந்துவிடும். இந்த முறையில் அவர் குழந்தையை சுமந்தவர் மட்டுமே ஆவார். மரபியல் ரீதியாக அவருக்கும் குழந்தைக்கும் எந்த உறவும் கிடையாது. கருவை சுமக்கும்போது மட்டுமே குழந்தைக்கு தாயாக இருப்பார். தேவைப்பட்டால் சில காலம் அவர் அந்த தம்பதியினருடன் இருந்து குழந்தைக்கு பாலூட்டுவார். அவ்வளவுதான்.

    * பெண் மலட்டுத்தன்மையுடன் இருந்தால், டாக்டர்கள் அவரது கணவரின் உயிரணுவையும் வாடகைக்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து கருவை உருவாக்குவார்கள். பின்னர் அதை வாடகைத்தாய் தன் வயிற்றில் சுமந்து, குழந்தையை பெற்றுக்கொடுப்பார்.

    * இதேபோல் சம்பந்தப்பட்ட தம்பதியரில் கணவரின் உயிரணு பலவீனமாக இருந்தால் அந்த பெண்ணின் கருமுட்டையையும் வேறொரு ஆணின் உயிரணுவையும் சேர்த்து கருவை உருவாக்கி வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

    * இது தவிர இருவருமே குழந்தை பெறும் தகுதி இல்லாதவர்கள் என்றாலும் வேறொரு ஆணிடம் இருந்து உயிரணுவை பெற்று வாடகைத்தாயின் கருமுட்டையுடன் சேர்த்து செயற்கை முறையில் கருவை உருவாக்கி அவரது கருப்பையில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

    * இதேபோல் திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கூட இப்படி வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.

    இந்த இரு முறைகளில் வாடகைத்தாயாக இருக்கும் பெண் மரபியல் ரீதியாகவும் குழந்தைக்கு தாயாக இருப்பார்.

    வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட தம்பதியர் தங்கள் தகுதிக்கு ஏற்ப பணம் கொடுக்கலாம், பிற உதவிகள், வசதிகள் செய்து தரலாம். எதுவுமே கொடுக்காமலும் இருக்கலாம். சில நாடுகளில் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம்; செல்லுபடி ஆகாது.

    வாடகைத்தாயாக இருக்கும் பெண்கள் பணத்துக்காக குழந்தை பெற்றுக்கொடுத்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் சில பிரச்சினைகளை சந்திப்பது உண்டு. தான் 10 மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தை எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறதே! அதன் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே! என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்படுவது உண்டு.

    உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ ஒரு பெண் கருத்தரித்து குழந்தை பெற முடியாத நிலையில் இருந்தால், அதை காரணம் காட்டி கணவன் அவளை விவாகரத்து செய்துவிடாமல் தடுப்பதற்காக பழங்காலத்திலேயே வாடகைத்தாய் முறை இருந்ததாக பாபிலோனிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாடகைத்தாய் முறை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

    இந்தியாவில் சமீபத்திய சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.

    இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான செலவு குறைவு என்பதால், வெளிநாட்டினர் ஏராளமானோர் இங்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துக்கொண்டே போனது. நிலைமை மோசமானதால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டினருக்கு இனி சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என்று கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

    குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த வாடகைத்தாய் முறையை பேராசை கொண்ட சில டாக்டர்களும், இடைத்தரகர்களும் பணம் பறிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டதால், அதை தடுக்கும் பொருட்டு வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * வாடகைத்தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வரை இருக்கவேண்டும்.

    * சம்பந்தப்பட்ட தம்பதியின் நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். அதற்காக 3 முறை முயற்சி செய்யலாம்.

    * வாடகைத்தாய் கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என 16 மாத கால காப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ செலவு கொடுக்கலாம்.

    * ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

    * ஒரு பெண் பணத்துக்காக வாடகைத்தாய் ஆக முடியாது. வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதி இந்தியராக இருப்பதோடு, திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கவேண்டும்.

    * தம்பதியில் மனைவியின் வயது 23-ல் இருந்து 50-க்குள் இருக்க வேண்டும். கணவரின் வயது 26-ல் இருந்து 55-க்குள் இருக்க வேண்டும்.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் குழந்தைபேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

    * தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக்கூடாது. தத்துக்குழந்தையோ அல்லது ஏற்கனவே வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக்கூடாது.

    * தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து அது குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, உடல் நலம் மனநலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ வாரியத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.

    * திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதி, தன் பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

    * வாடகைத்தாய் முறையை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    இதுபோன்று பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

    இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. அப்பாவி ஏழை பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி, குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதிகளிடம் இருந்து ஆஸ்பத்திரிகள் பணம் கறப்பது குறையும் என்று சட்ட திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.

    ''நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும் என்பது உளவியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. யாரோ ஒரு பெண் என்றால் குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு போய்விடுவார். உறவுப்பெண் என்றால் அவர் தான் சுமந்து பெற்ற குழந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். இது அவளுக்குள் ஒரு பாசப்போராட்டத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தையின் பெற்றோருக்கு தர்மசங்கடமான சூழ்நிலையையும் உருவாக்கும். மேலும் குழந்தை வளர வளர அதன் மனதிலும் பாதிப்புகள் ஏற்படலாம்'' என்பது சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களின் கருத்து.

    தம்பதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது என்று சட்ட நிபுணர் அனில் மல்கோத்ரா கூறுகிறார்.

    வாடகைத்தாய் முறை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் என்றால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள டாக்டர்கள் முன்வரமாட்டார்கள் என்று இந்த துறையின் நிபுணரான டாக்டர் நாராயண பட்டேல் கூறி இருக்கிறார்.

    • உடல் பருமன் எச்சரிக்கை அறிகுறியாகும்.
    • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் ஒரு காரணமாகும்.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.

    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

    பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?

    ஆரம்ப கட்ட அறிகுறிகள்

    * ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.

    * பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    * உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.

    * உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

    * டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    * மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.

    மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

    • உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம்.
    • முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது.

    மூட்டுவலியும், முதுகுவலியும் பெண்களின் ஆரோக்கியத்தினை பாதிக்கும் ஒரு அங்கமாகவே உள்ளன. பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் பெரும்பாலானவர்கள் முதுகு வலி அனுபவிக்காத நாட்களே இல்லை எனலாம். முதுகு வலி ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏனெனில் மகப்பேற்றின் போது அளவில் பெரிதாகும் கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் விளைவாக முதுகுவலி உண்டாகக்கூடும்.

    மகவை சுமக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய வலியினையும் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று. இயற்கையாக ஏற்படும் இத்தகைய மாறுதல்களால் உண்டாகும் முதுகு தண்டுவட வலி ஒருபுறமிருக்க, மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளால் இது போன்ற தொந்தரவுகள் இன்னும் சற்று கூடுதலாகி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, ஆரோக்கியத்திற்கான பாதையைக் கடினமாக்குகிறது.

    முதுகு தண்டுவடப் பகுதியில் தண்டுவட எலும்புகளின் இடையே உள்ள சவ்வு வீக்கம், சவ்வு சரிவு போன்ற பல்வேறு நோய்நிலைகள் இன்றைய நவீன காலத்தில் பெண்களை அதிகம் தாக்கி அவர்களை துன்புறுத்துவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி தண்டுவட எலும்புப் பகுதியில் ஏற்படும் கட்டிகளும் முதுகு வலிக்கு காரணமாகின்றன.

    ஆகவே பெண்கள் நாட்பட்ட முதுகு வலியில், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்கும் அவர்கள் தான் ஆணி வேர். முதுகுவலி ஒருபுறமிருக்க, பெண்களுக்கு வயோதிகப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் கீல்வாதம் அவர்களை அதிகம் துன்புறுத்தும். இந்த மூட்டு வாத நோயை 45 வயது கடந்த பெண்கள் அனைவரும் அனுபவிக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது வருத்தம் தான். ஏனெனில் பெண்களில் மூன்றில் இருவருக்கு இந்த மூட்டு வாதம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கிறது.

    பொதுவாக இரு முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் இந்த முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வேதனை, நடப்பதில் சிரமம், உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், தாங்கி தாங்கி நடத்தல் போன்ற மூட்டு வாத நோயின் பல குறிகுணங்களைக் கொண்டு பெண்கள் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். பல்வேறு நோய் நிலைகள் பெண்களின் மூட்டுக்களை பாதிக்கும் தன்மையுடையதால் மருத்துவரை அணுகி நோய்நிலையைக் கணித்து சிகிச்சையை துவங்குவது நல்லது.

    சித்த மருத்துவ மூலிகைகள் பல பெண்களின் மூட்டுக்களின் வாதம் சார்ந்த அனைத்து நோய் நிலையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளன. தசமூலம், ஓமம், முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, குறுந்தொட்டி, அமுக்கரா, நிலவேம்பு, திரிபலை,திரிகடுகு, குங்கிலியம் போன்ற மூலிகைகள் அவற்றில் சில. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி நோய்களுக்கு சித்த மருத்துவம் எளிமையாக வலியுறுத்துவது முருங்கையைத் தான். நவீன உலகத்தில் எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை நாட துவங்கி விட்டதால், முருங்கை போன்ற மருத்துவ குணமிக்க எளிய மூலிகை மருந்துகள் பல நம் நாட்டினருக்கு மறந்தே போய்விட்டது.

    முருங்கை கீரையுடன் மூட்டு வலியை குறைக்கும் மருத்துவகுணமுள்ள, இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் இவற்றுடன் சிறிது உப்பிட்டு சூப் வைத்து அருந்தினால் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும். அடிக்கடி இதனை எடுத்து வர பெண்கள் வயோதிக பருவத்தில் கூட மூட்டு நோயில் இருந்து விடுபட்டு வீறு நடை கொள்ள முடியும்.

    சித்த மருத்துவ மருந்தான 'குந்திரிக்க தைலம்' எனும் மருந்தினை மூட்டுகளின் வீக்கத்தின் மீது தடவி வெந்நீரில் ஒத்தடமிட வீக்கம் குறைந்து நிவாரணம் தரும். பிண்ட தைலம் எனும் சித்த மருந்தையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    மூட்டு வலியால் அவதியுறும் பெண்கள் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து தொடர்ந்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் தரும்.

    சர்வ ரோக நிவாரணியான அமுக்கராக் கிழங்கு சேர்ந்த அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்தை பாலில் கலந்து எடுப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகு வலி சார்ந்த நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதை வீக்கமான இடத்தில் முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்று போட்டாலும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

    மூட்டு வாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான். முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் மற்றும் அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணர்வு தந்து மீண்டும் வளர்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூடு தன்மையுள்ள முடக்கறுத்தான் கீரை நோய்க்கு காரணமாகும் சித்த மருத்துவம் கூறும் வாதம்,கபம் இவற்றை குறைத்து மூட்டு வலியை குறைக்கும். அவ்வப்போது முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலும், சூப் வைத்து குடித்தாலும் வாதத்தை குறைக்கும்.

    மூட்டு சார்ந்த நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதம் பாதிப்படைவதே முதன்மைக் காரணம் என்கிறது சித்த மருத்துவம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதும். அவ்வப்போது மலச்சிக்கலை போக்கிக் கொள்வதும் வாதத்தை குறைக்கும் எளிமையான வழிமுறைகள்.

    சாதாரணமாக ஏற்படும் இடுப்பு வலி, முதுகு தண்டுவட எலும்பு பகுதிகளில் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கங்களுக்கு நொச்சி, ஆமணக்கு இலை, எருக்கு இலை, வாதமடக்கி எனும் தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவைகளில் ஒன்றை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட நல்ல பலன் தரும். அல்லது இவை சேர்ந்த சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் காரணிகளை தடுக்க கூடியதாக உள்ளன.

    நொச்சி இலையை குளிக்கின்ற வெந்நீரில் போட்டு குளிக்க இடுப்பு வலி, மூட்டு வலிகளை குறைக்கும். அல்லது யூகலிப்டஸ் இலைகளை போட்டு குளித்தாலும் வலி குறையும். மூட்டுகளில் சேரும் கபமாகிய குளிர்ச்சியும், வாதமாகிய வாயுவும் வலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுவதால் குளிர்ச்சி, வாயுவை அதிகரிக்கும் உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் மூட்டுகளில் வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    வலிகளை குறைக்க மருந்துகளை உட்கொண்டு சளைத்தவர்கள், வலியைக் குறைக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சிறிது கற்பூரம், கொஞ்சம் ஓமம் சேர்த்து காய்ச்சி பதமான சூட்டில் மேலே தடவி வர நிவாரணம் தரும். மூட்டு வீக்கங்களுக்கு சோற்றுக்கற்றாழை மடலை சூடாக்கி ஒத்தடம் இடுவது நல்லது. இயற்கையாக வீக்கமுருக்கி செய்கை தன்மையுள்ள மஞ்சளையும், கல்லுப்பையும் சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் இடுவதும் வீக்கம் குறைய வழிவகை ஆகும்.

    ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாதம், ருமட்டாய்டு எனும் முடக்கு வாதம், யூரிக் அமிலம் உப்பு படிவதால் ஏற்படும் கீல்வாதம் ஆகிய மூன்று முக்கிய வகைகளுமே பெண்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. கருவில் பிள்ளையை சுமந்து உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் பெண்கள், இத்தகைய மூட்டு வலிகளை தாங்க முடியாமல் தவிப்பது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவலநிலைக்கு ஆளாக்கும். நோயின் தன்மையை பிரித்தறிந்து துவக்கத்திலேயே சித்த மருத்துவத்தை நாடுவது நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவும்.

    சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு வெளி மருத்துவ முறைகள் 32 என்பதும் தான். சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளில் சிறப்பு மிக்க ஒன்று பற்று போடும் முறை. மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்ற நோய் நிலைகளில் வீக்கத்தை குறைக்கவும், எலும்புகளை வன்மைப்படுத்தவும் ஆவாரை இலை,முருங்கை இலை, கருப்பு உளுந்து இவற்றுடன் சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டு வர சிறந்த பயன் தரும். சித்த மருத்துவம் கூறும் உள்மருந்துகளை மட்டும் பயன்படுத்துவதை விடுத்து வெளி மருந்துகளையும் பயன்படுத்தினால் ஆரோக்கியம் விரைவில் கிட்டும்.

    உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பேணிக்காக்க வேண்டும். அத்துடன் உணவே மருந்து எனும் சித்த மருத்துவ அடிப்படையினை பின்பற்ற துவங்கினால் மூட்டு வலி மாத்திரம் அல்ல, இன்னும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளையும் தடுத்து நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • கருப்பையின் சுவர்களில் நீர்க்கட்டிகள் தோன்றி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
    • கருப்பை நீர்க்கட்டிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    10 பெண்களில் ஒருவர் பி.சி.ஓ.டி. எனப்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு ஆளாகிறார். ஹார்மோன் சம நிலையின்மை, வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது. கருப்பையின் சுவர்களில் நீர்க்கட்டிகள் தோன்றி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். கருப்பை நீர்க்கட்டிகள் எனப்படும் பி.சி.ஓ.டி. பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும் பற்றி பார்ப்போம்.

    1. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பாதிப்புக்குள்ளாகும் அனைவரும் உடல் பருமனாக காணப்படுவார்கள்.

    உண்மை: பி.சி.ஓ.டி நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். முகத்தில் முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவை பி.சி.ஓ.டி. பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். கருப்பையில் நீர்க்கட்டிகளின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும்.

    2. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்களால் கருத்தரிக்க முடியாது.

    உண்மை: கருப்பையில் இருந்து கரு முட்டை வெளியேற வாய்ப்பு இல்லாத சூழலில் (அனோவுலேட்டரி) 75 சதவீதம் வரை மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான பி.சி.ஓ.டி. நோயாளிகள் கருமுட்டை சிகிச்சை மூலம் கருத்தரிக்கிறார்கள். லேசான பாதிப்பு கொண்டிருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையை சார்ந்திருக்காமலேயே கருத்தரிக்கவும் செய்கிறார்கள்.

    3. கட்டுக்கதை: கருப்பையில் பல நீர்க்கட்டிகள் இருந்தால்தான் அது பி.சி.ஓ.டி. பாதிப்பு என்று உறுதி செய்யப்படும்.

    உண்மை: மாதவிடாயின்போது கருமுட்டைகள் வெளியேறும் அளவும், ரத்த ஓட்டமும் குறைவது, முகத்தில் அதிகப்படியான முடிகள் வளர்வது உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டே உறுதிப்படுத்திவிடலாம்.

    4. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை இருக்கும்.

    உண்மை: மாதவிடாய் சுழற்சி இல்லாதது, மாதவிடாயின்போது உதிரப்போக்கு குறைவது, மாதவிடாய் தாமதமாவது, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி நிலவுவது போன்ற பிரச்சினைகளை பி.சி.ஓ.டி. பாதிப்புக்குள்ளாகுபவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

    5. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கும் முகம், மார்பு பகுதியில் முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களை போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்க வைக்கும்.

    உண்மை: முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு பி.சி.ஓ.டி. மட்டுமே காரணமில்லை. தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கும் முடி வளர்ச்சி ஏற்படலாம். அட்ரீனல், பிட்யூட்டரி சுரப்பிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்போதும் பாதிப்பு உண்டாகலாம்.

    6. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளும் சிகிச்சை பெற வேண்டும்.

    உண்மை: வழக்கமான மாதவிடாய் சுழற்சி கொண்ட இளம் பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கு ஹார்மோன் சிகிச்சை தேவையில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள் அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

    7. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பாதிப்புக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு கிடையாது.

    உண்மை: பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கு இன்சுலின் தடுப்பு தன்மை உண்டு. மேலும் நீரிழிவு நோய் உருவாகும் அபாயமும் அதிகமுண்டு. இருப்பினும் அதற்குரிய தொடர்பு பற்றிய காரணம் முழுமையாக அறியப்படவில்லை.

    8. கட்டுக்கதை பி.சி.ஓ.டி. பாதிப்புக்கு முறையான சிகிச்சைகள் இல்லை.

    உண்மை: பி.சி.ஓ.டி. நோயாளிகளை சிகிச்சை மூலம் திறம்பட கையாள முடியும். எடை குறைப்பு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் சுமார் 2 முதல் 5 சதவீதம் உடல் எடையை குறைக்கலாம். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை 21 சதவீதம் குறைக்கலாம். மது அருந்துதல், புகைப்பிடித்தல், மன அழுத்தங்கள் போன்றவை நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    • தற்போது 'சிசேரியன்' பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.
    • உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.

    கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது 'சிசேரியன்' எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி.

    சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.

    சிசேரியன்: குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல் நலம் காரணமாக, தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.

    தற்போது சிசேரியன் அதிகரிக்க காரணம் என்ன?

    தாமதமான திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவ தால் 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையே சிசேரியன் அதிகரிக்கக் காரணம். இது தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சிசேரியன் செய்ய நேரிடும்.

    சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை மருத்துவர்கள் எப்போது தீர்மானிக்கிறார்கள்?

    கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதைப் பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. அதே சமயம், கடைசி நேரத்தில் சிசேரியன் தேவைப்படும் சூழலும் ஏற்படும். இரட்டைக் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் சிசேரியன் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, தாய் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.

    முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதா?

    முதல் குழந்தை பிறப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கர்ப்பப்பையை குறுக்கே வெட்டி தையல் போட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்கையில் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டு.

    சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி எப்போதும் அவசியம். உணவு முறையிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

    ×