என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's World"

    • பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு.
    • வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம். வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்ட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

    அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும்.

    எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது. உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும்.

    இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள் மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது நல்லது.

    பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.

    செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வைபடும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.

    குளிப்பது, பாத்திரம் துலக்குவது. வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.

    வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.

    • உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
    • உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம்.

    40 வயதை தாண்டிய பெண்களா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு முதலில் பெண்கள் 40 வயதை தாண்டியவுடன் உடல் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.

    40 வயதிற்கு மேல் உடலை அழகாக வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? என்று எல்லோரும் நம்மை பார்த்து கேட்கும் அளவுக்கு ஆச்சரியமாக வைத்துக்கொண்டால் அதுவே நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

    நமக்கு பணம், நகை இருக்கும்போது வரும் பெருமையை விட இவ்வளவு வயது ஆகியும் எப்படி இருக்கிறாங்க. உடலை எப்படி மெயிண்டெய்ன் பண்றாங்க என்று நம்மை பார்த்து சிலர் கூறுவதும் நமக்கு ஒரு பெருமைதான். அதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஜிம்மிற்கு செல்வதெற்கெல்லாம் வசதி இல்லை, அல்லது நேரம் இல்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே நான் செய்யும் வேலைகள் கூட நமக்கு ஒரு வகையான உடற்பயிற்சியே. அதாவது கூட்டுவது, துடைப்பது, உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளை செய்வது, முடிந்தவரைக்கும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியம்.

    அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம். உடலுக்கு யோகா வலிமையையும் மனதுக்கு அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும். அடுத்து கணவன், மனைவி உறவுக்குள்ளும் ஒருவகையான சலிப்பு மற்றும் விரிசல் ஏற்படுகின்றது. ஏன் இந்த விரிசல் என்றால் குழந்தையை வளர்க்கிறோம் என்ற பெயரில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையோ, விருப்பத்தை சொல்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கடமைக்காக வாழ்வதாக இன்றும் நிறையபேர் சொல்வதுண்டு. 40 வயதாகிவிட்டது இனிமேல் என்ன? என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 40 வயதிற்கு பிறகும் சந்தோசமான வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணவேண்டும்.

    உணவுமுறைகளிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைபேறுக்கு பிறகு நிறைய பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

    இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. அதற்கு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடிய பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நமது உடம்பை இயற்கையான உணவை உட்கொண்டு நல்ல திடகாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவின் மீது அதிக அக்கறை செலுத்தி நல்ல சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது. எடையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக நாம் அடிக்கடி கல்யாண போட்டோவை எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் கல்யானத்தின் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்திருப்பார்கள். இது தான் அவர் உடல் எடையை குறைக்க நல்ல டிப்ஸ்.

    கல்யாணத்திற்கு பிறகு எல்லோருக்கும் எடை அதிகரிக்க காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்வலி, முதுகுவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எடைமீது மட்டும் இல்லீங்க, உடை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    40 வயதிற்கு மேல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளனர். அது ரொம்ப தவறு. எப்போதுமே ஒரு பெண் எவ்வளவு வயதாக இருந்தாலும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் வயதுக்கு ஏற்ற உடை, அலங்காரம், ஆபரணங்கள் அணிவது என்று தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மெனோபாஸ் பிரச்சினை பெண்களை இன்னும் பலவீனமாக்கிவிடுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடமும், கணவனிடம் புரியவைக்க வேண்டும். இதனாலேயே பல பெண்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிழுங்கள். தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை விடுத்து குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். குழந்தைகளுடன் நாம் செலவு செய்ய செய்ய நாம் நம்முடைய வயதை மறந்து குழந்தைகளுடன் சேர்ந்து இன்னும் நாம் இளமையாக இருப்போம். நாம் நம்முடைய வயதை மறந்து சந்தோசமாக இருக்கமுடியும்.

    • பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள்.
    • பல பெண்கள் பயந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்க முடியும்.

    ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அலுவகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம், பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது.

    பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும். உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார்' போபியா' என்று பெயர். தொடர் முயற்சிகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். தற்போதைய காலத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இருந்தபோதும், பல பெண்கள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

    மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், பரம்பரையாக உண்டாகும் மரபணு மாற்றம், வாகனம் ஓட்டுவது பற்றிய எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.

    இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும் போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும் அத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியாக வியர்த்து கொட்டுவதால் உடல் குளிர்ந்து போவது, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது. குமட்டல், மூச்சுத்தினறல், நடுக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

    ''மோட்டார்போபியா' பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஒட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு குழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    முதலில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து பழகிய பின்னர், அந்த வாகனத்தை ஓட்ட முயற்சிக்கலாம். தொடக்கத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் பயணித்து பயத்தை போக்கிக்கொண்ட பிறகு, நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். "மோட்டார் போபியா' பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, விர்ச்சுவல் ரியாகிட்டி எக்ஸ்போஷர் தெரபி மற்றும் பதற்றத்துக்கான எதிர்ப்பு மருத்துகளை உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

    • வேலையை சுலபமாக்கக்கூடியது என்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம்.
    • அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.

    வாஷிங்மெஷின் தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறி விட்டது. நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கக்கூடியதாக இருப்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம். அதேசமயம் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சலவை எந்திரத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    தானியங்கி முறையில் செயல்படும் ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷினுடன் ஒப்பிடும்போது, செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பல வகைகளில் பயன்தரக்கூடியது. இதை பயன்படுத்துவதால் மின்சாரத்தையும், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரு நாளில் துவைக்கப்படும் துணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வாஷிங்மெஷினின் கொள்ளளவைத் தேர்வு செய்ய வேண்டும். 3 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 6 முதல் 6.5கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும், 4 முதல் 6 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 7 கிலோ கொள்ளளவு கொண்ட மெஷினும் வாங்கலாம். 7-க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 10 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும் ஏற்றதாக இருக்கும்.

    சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை எந்திரமும் பழுதாகக் கூடும்.

    வாஷிங்மெஷினுக்குள் துணிகளை போடுவதற்கு முன்பு, பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் காகிதங்கள், பணம். நாணயங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் கவனமாக வெளியே எடுத்து விட வேண்டும். இவை தண்ணீர் வெளியே செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதோடு. மெஷினில் உள்ள சிறிய பாகங்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

    சலவை செய்யும்போது வாஷிங்மெஷினுக்குள் அதிக கனமான ஜீன்ஸ் பேண்ட் போன்ற துணிகளை முதலில் போட வேண்டும். பிறகு லேசான துணிகளை அவற்றின் மேலே போட வேண்டும். அப்போதுதான் எல்லா துணிகளும் சுத்தமாக துவைக்கப்படும்.

    தண்ணீரை பிழிவதற்கான டிரையர் பகுதியில் துணிகளை போட்டதும் பாதுகாப்பு மூடியை பொருத்த வேண்டியது அவசியமானது. இல்லையெனில் அதிகப்படியான அதிர்வால் டிரையர் டிரம் பழுதாகும்.

    டாப் லோடிங் மெஷின்களை காட்டிலும் ஃபிரண்ட் லோடிங் மெஷின்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், டாப் லோடிங் மெஷின்களில் தண்ணீர் தாமாகவே கீழ் இறங்கி விடும் என்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.

    • நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
    • நடப்பதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது.

    இந்த விசயம் நம் அனைவரது வாழ்க்கையிலும் நடந்ததாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாம் அனைவரும் இந்த கொரோனா காலத்தை கடந்துதானே வந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறிப்போயிருக்கும்.

    நம்முடைய வாழ்க்கை தலைகீழாக மாறும்போது ஒரு சிலருக்கு வாழ்க்கைகுறித்த பயம் ஏற்படும். உதாரணத்திற்கு யாருக்காவது திடீரென வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறது. அதைக்கண்டு நாம் முதலில் பயந்துவிடுவோம். ஐயோ நான் என்ன ஆகப்போகிறேனோ, எவ்வாறு பாதிக்கப்படபோகிறேனோ, அல்லது நஷ்டம் ஏற்படுமோ என்ற அளவிற்கு பயப்படுவோம். அதுவே இரண்டு நாட்களுக்கு பிறகு அதற்கேற்ற வழியினை தெரிந்துகொண்டு அதனை எதிர்கொள்வதற்கு கற்றுக்கொள்வோம். அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டுவந்தோம் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் அளவுக்கு அந்த விஷயம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிடுகிறது.

    சிலநேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளவே முடியாத அளவிற்கான பிரச்சினைகள் கூட வரும். அப்படி வந்தால் அதன்மூலம் நம்முடைய வாழ்க்கைமுடிகிறது என்று இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் தான் என்றாலும் வாழ்க்கை பாடத்தில் பல பெரிய பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் போது எதையுமே துணிச்சலாக செய்வதற்கும், அதன் யதார்த்தத்தை புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கும்.

    நம்முடைய வாழ்க்கையில் ஏன் நமக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து வாழ்வதைவிட, நமது வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொண்டு இது இப்படித்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது. இதையே யோசித்துக்கொண்டு இருந்தால் அதில் எந்த பலனும் இருக்காது. அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு வெளியே வருவோம் என்பதில் நம் எண்ணங்கள் தேங்கி நின்றுவிடுகிறது.

    அதனால் ஒரு கஷ்டம் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு அந்த கஷ்டத்தில் இருந்து எவ்வாறு வெளியேற என்ன வழி என்பதைத்தான் நினைக்க வேண்டும். அதிலும் இந்த கஷ்டமான நேரத்திலும் நமக்கு என்ன நஷ்டம் ஏற்படும் என்பதையும் தாங்கிக்கொண்டு முடிவு எடுப்பதே சிறந்தது. நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுவே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வழிவகுக்கும்.

    உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்றால் எதிர்மறை எண்ணங்களை விடுத்து இப்போதைக்கு என்ன தேவை என்பதை மட்டும் புரிந்துகொண்டு அதன்படி செல்வதே சிறந்ததாக இருக்கும். அப்போது தான் வாழ்க்கையில் இப்போது என்னென்ன விஷயங்கள் நமக்கு சந்தோசத்தை தருகிறதோ அது இந்த நிலைமையில் இருந்து கடந்து செல்வதற்கும், வாழ்கையில் அடுத்த நிலையை நாம் அடைவதற்கும் உதவி செய்யும்.

    • மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல.
    • எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது.

    முதலில் மன அழுத்தம் என்பது ஒரு சிம்டம். மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது பிரச்சினையின் வெளிப்பாடு என்பது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிலபேர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் தான் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. மன அழுத்தம் எங்கிருந்து அல்லது எதில் இருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிந்தாலே நாம் அதில் இருந்து வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

    மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினை அல்லது ஒருவர் மீது வைக்கப்படுகிற அழுத்தம். அதாவது இதை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையை நாம் இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே மன அழுத்தம். இது நாம் மற்றவர்கள் மேல் வைத்ததாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மேல் வைப்பதாக கூட இருக்கலாம். உலகத்தில் நமக்கு தேவைப்படுகிற விஷயமாக இருந்தாலும் சரி, நாமே நம் மனதில் உருவாக்கி கொள்கின்ற விஷயமாக இருந்தாலும் சரி இதுவே மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடுகிறது.

    மன அழுத்தத்தை உங்களால் கையாள் முடியும் என்றால் அதனை நீங்களே உடைத்து எரிந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய நிலையை அடைய முடியும். எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது. இந்த அழுத்தத்தை முறையாக கையாள தெரியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு உங்களுக்கு மோட்டார்சைக்கிள் தேவை. அங்கு 10 நாட்களுக்கும் சேர வேண்டும். உங்களிடம் பைக் இல்லை, பைக் வாங்கினாலும் 10 நாட்களில் உங்களுக்கு லைசென்சும் கிடைக்காது. எனவே இதனால் உங்களது மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அதுவே சிலநாட்கள் தொடர்ந்து இருந்தால் அதுவே ஒரு மன அழுத்தமாக மாறிவிடும். இது ஸ்கில் லெவல் பிரச்சினை.

    மற்றொரு உதாரணம் நீங்கள் ஒரு ஆபிசில் வேலைசெய்கிறீர்கள் அங்கு நீங்கள் டாக்குமெண்ட் டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுமாராக ஒரு நாளைக்கு 100 டாக்குமெண்ட் டைப் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆபிசில் சிலபேர்களை வேலையைவிட்டு எடுத்துவிடுகிறார்கள் அதனால் என்ன ஆகிறது அவர்களுடைய வேலையும் உங்கள் தலைமேல் விழுகிறது. இப்போது நீங்கள் ஒருநாளைக்கு 150 டாக்குமெண்ட் தயார்செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அப்போது வேலைபளு காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த வேலை இல்லை என்றால் நான் என்ன செய்வது? அல்லது இவ்வளவு வேலையை நாம் ஒருவரே எப்படி செய்வது, இந்த கூடுதல் வேலையினால் வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் தடைபடும். குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும்.

    எனவே எப்போதும் ஸ்டிரஸ் (மன அழுத்தம்) எதனால் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும். எனவே உங்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ள ஒரு 10 நாட்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இன்றைக்கு நம் மனதை பாதித்த மற்றும் அழுத்தத்தை கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்பதை தினமும் எழுதிக்கொண்டு வர வேண்டும்.

    10 நாட்கள் கழித்து அன்றைக்கு உங்களுக்கு மிகவும் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை வட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அந்த 10 பிரச்சினைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நீங்கள் யோசித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக்கொண்டே வர வேண்டும். எழுதிவைத்த எல்லா தீர்வுகளும் முடிவுக்கு வராது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.

    சிலநேரங்களில் நாம் தோல்வியை கூட தழுவலாம். ஆனால் தொடர்ந்து இதை செயல்படுத்துக்கொண்டே வந்தால் நமக்கு பிரச்சினை வந்தால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதை பற்றிய புரிதல் இருக்கும். சில நேரங்களில் நமக்கு எழுதி வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லை என்றால் அதனைவிட்டு நாம் வெளியேற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடுமையான நிலைக்கு வருவீர்கள்.

    இதில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதும் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எனக்கு நிறைய சம்பளமும் வேணும், நான் குறைந்த நேரம் தான் வேலை செய்ய வேண்டும். நான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்றால் அனைத்தும் எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் மட்டும் உங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டி வரும். பணத்தையோ, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையோ அல்லது உழைப்பையோ என்பதை யோசித்து பார்த்து அதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.

    அதாவது உங்களுக்கு எது முக்கியம் என்பதை தேடி ஆராய்ந்து பார்த்து அது உங்களுக்கு எந்த அளவுக்கு பயனை தருகிறது என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்தது ரொம்ம முக்கியமான விஷயம் என்னவென்றால் எடுத்த முடிவை ஃபாளோ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவை மாற்றி மாற்றி எடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவது கடினம்.

    எனவே நாம் ஒரு முடிவெடுத்தால் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது கொஞ்ச நாளைக்காவது அதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவெடுத்த பிறகு நீங்கள் எடுத்த முடிவில் இருந்து மாற்றிக்கொண்டே வந்தால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாது.

    இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற யோகா, தியானம் செய்வது சிறந்தது. அதிலும் சென் எனப்படுகிற தியானம் இதற்கு மிகவும் உதவும்.

    • இந்த ஈர்க்கும் திறனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகையான ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன.
    • ஈர்ப்பு என்பது பொதுவாக 4 விஷயங்களில் நடக்கும்.

    எல்லோரையும் ஈர்ப்பதற்கான உளவியல் காரணத்தை பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஈர்க்கும் திறனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகையான ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன. இரண்டுபேருக்குமே பொருந்தக்கூடிய பொதுவான விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

    இந்த ஈர்ப்பு என்பது பொதுவாக 4 விஷயங்களில் நடக்கும். முதலில் சோசியல் அதாவது நாம் எப்படி பழகுகிறோம். இரண்டாவது சைக்கலாஜிக்கல் அதாவது நம்முடைய மனப்பான்மை, சிந்தனை அதைப்பற்றியது. மூன்றாவது மெட்டீரியல் அதாவது பொருட்களை வைத்து பிடிப்பது, நான்காவது பிசிக்கல் அதாவது உடல் அமைப்பை பொருத்தது. இவ்வாறு நான்கு வகையாக பிரித்துக்கொள்ளலாம்.

    முதலில் சமுதாயத்தில் ஒரு மனிதர் எப்படி இருந்தால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மனிதருக்கு ஹியூமர் இருக்க வேண்டும். அந்த ஹியூமரில் கூட நல்ல ஹியூமர், கெட்ட ஹியூமர் என்று உள்ளது. உதாரணத்துக்கு ஒருவரது உடல் அமைப்பை கிண்டல் செய்வது. அதையே நாம் தொடர்ந்து செய்தால் உங்களுடைய வாழ்க்கையும் டார்க்காக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களுடன் இருக்கும் நபர்கள் என்றைக்குமே இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது.

    அப்போ சரியான ஹியூமர் என்ன என்றால், மற்றவர்களை பாதிக்காமல் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவையாக கூறும் தன்மை தான் சரியான ஹியூமர்.

    இரண்டாவது கனெக்ஷன்ஸ். உங்களால் எந்த அளவிற்கு மற்றவர்களிடம் கனெக்ட் ஆக முடிகிறதோ அந்த அளவிற்கு கனெக்டிவாக தெரிவீர்கள். உதாரணத்துக்கு உங்களிடம் ஒருவர் வந்து பேசுகிறார் என்றால் அந்த நபரை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் கூட அவர்கூறும் விஷயங்களை நீங்கள் ஆர்வமாக கவனிக்கும்போது அவருக்கு உங்கள் மேல் ஒரு இணக்கம் இருக்கும். எந்த ஒருமனிதனால் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்லமுடியுமோ அவர் தனியாக தெரிவார். இதைத்தான் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் தன்மை என்கிறோம்.

    மூன்றாவதாக சவுகரியம். அதாவது எல்லோரிடமும் எளிதாக பழகும் தன்மை. உதாரணமாக இப்போது 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் புதிதாக ஒருவர் வந்து சேர்ந்தால் அவருக்கு மனதில் ஒரு புதுவித தன்மை இருக்கும். எப்படி நடந்துகொள்வது, எப்படி பேசுறது என்ற மனநிலை இருக்கும். அவரிடம் நீங்கள் சகஜமாக பேசுவதும், பழகுவதுமாக நடந்துகொண்டால், அது அவர்களுக்கு உங்களிடம் எளிதாக பழகுவதற்கு சவுகரியத்தை ஏற்படுத்தும். அப்போது உங்களை மற்றவர்களுக்கு எளிதாக பிடிக்க ஆரம்பித்துவிடும்.

    இப்போது நாம் கூறக்கூடிய இந்த 4 வகை தன்மைகளையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடைமுறைபடுத்துவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

    நான்காவது சைக்கலாஜிக்கல். எத்தனை தடவை ஒருவர் உங்களை பார்க்கிறாரோ அந்த அளவிற்கு அவருக்கு உங்களை பிடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தான் காதலும் இந்த தன்மை இருப்பவர்களிடம் உருவாகிறது. உதாரணத்திற்கு ஒரேபள்ளியில் படிப்பவராகவோ, ஒரே பஸ்சில் பார்ப்பவராகவோ, அலுவலகத்தில் வேலைபார்ப்பவராகவோ அல்லது ரெயிலில் தினமும் உங்களோடு பயணப்பவர்களாக கூட இருக்கலாம். ஏன் இவர்களிடம் ஒரு இணக்கம் உருவாகிறது என்றால். திரும்பத்திரும்ப ஒரு நிகழ்ச்சியோ அல்லது திருப்பத்திரும்ப ஒருவரை நாம் பார்ப்பதாலோ ஏற்படுகிறது. யாரிடம் பழகுவதில் எளிதாகவும், பழகுவதற்கு வசதியாகவும் இருக்கிறதோ அவரை தான் மற்றவர்களுக்கும் பிடிக்க ஆரம்பிக்கிறது.

    யார் ஒருவருக்கு நாம் புது கருத்தை சொல்லும்போது, அது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று சொல்லாமல் அவர்கள் சொல்வதிலும் உண்மை இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருப்பார்கள்.

    இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும். உண்மை இருக்கும். அவர்கள் நினைப்பது தான் சரி என்ற உள்ளுணர்வு இருக்கும். ஒருவரிடம் நாம் சென்று பேசுவதில் தால் இணக்கம் ஏற்படும் என்று நினைத்துக்கொள்கிறோம். அது உண்மையல்ல, எந்த ஒரு மனிதர் நாம் சொல்வதை கேட்கிறாரோ அல்லது ஒருவர் சொல்வதை காதுகொடுத்து கேட்கிறாரோ அவரையும் மற்றவர்களுக்கு பிடிக்கும்.

    இறுதியாக கான்பிடெண்ட். எந்த ஒரு மனிதரும் தான் செய்யக்கூடிய விஷயத்தை மிகவும் உறுதியுடன் செய்கிறாரோ அவரையும் எல்லோருக்கும் எளிதில் பிடிக்கும்.

    • மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது.
    • மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்'

    மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பது, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவது, கை விரல்களின் அசைவுகளை சீராக்குவது என பல்வேறு விதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்' எனப்படும் மென்மையான பந்து உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை

    உள்ளங்கையில் வைத்து. முடிந்த வரை ஸ்டிரெஸ் பாலை கடினமாக அழுத்தவும். இவ்வாறு அழுத்தியபடி 5 வினாடிகள் வைத்திருந்த பின்பு மெதுவாக கைகளை தளர்த்தவும், இதுபோல தொடர்ந்து 10 முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளிக்கு பின்பு மற்றொரு கையிலும் இதேபோல் செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை தூண்டப்படுவதால், மூளையில் உள்ள உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதல் ஏற்படும். இந்த சமிக்கை உடல் முழுவதும் அனுப்பப்படும். பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பாலை வைத்து அழுத்தும்போது, தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படும். மேலும், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன், வலி நிவாரணியாகவும் செயல்படும்.

    ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கை பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்களையும் வெளியேற்றும். யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

    மனஅழுத்தம் உடையவர்கள். அடிக்கடி கோபம் வரும் குணாதிசயம் கொண்டவர்கள், எளிதில் பதற்றம் அடை பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம். கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • கடந்த ஆண்டு இந்த இருசக்கர வாகன பயணத்தை தொடங்கினார்.
    • ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 23 ஆயிரம் கிலோ மீட்டர் சென்றுள்ளேன்.

    இந்தியாவின் புனே நகரை சேர்ந்தவர் ரமாபாய் லத்படே (வயது 28). இவர் தனது பள்ளிக்கூட படிப்பை முடிந்ததும் தனது பெற்றோர்களின் ஆதரவுடன் துணி மற்றும் ஆடம்பர நகைக்கடையை தொடங்கினார். எனினும் தனது விருப்பமான கமர்ஷியல் பைலட் படிப்பை 24-ம் வயதில் நிறைவு செய்தார். உலகை இருசக்கர வாகனத்தின் மூலம் இந்தியாவின் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வலம் வர வேண்டும் என ஆர்வம் கொண்டார். இந்த விருப்பத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் வாழ்த்தி கடந்த ஆண்டு இந்த இருசக்கர வாகன பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து ரமாபாய் லத்படே கூறியதாவது:-

    கடந்த ஆண்டு மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று ஹோண்டா 350 சிசி என்ற இருசக்கர வாகனத்தின் மூலம் உலகை சுற்றி வரும் பயணத்தை மும்பையின் கேட் ஆப் இந்தியாவில் இருந்து தொடங்கினேன். இதன் மூலம் உலகின் 6 கண்டங்களைச் சேர்ந்த 40 நாடுகளில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    இந்த பயணத்தின் மூலம் இந்தியா, நேபாளம், பூடான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். மியான்மார் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக தனது இருசக்கர வாகனத்தை விமானம் மூலம் பாங்காக் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ௨௩ ஆயிரம் கிலோ மீட்டர் சென்றுள்ளேன்.

    ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற போது இந்தியர்கள் உள்ளிட்ட பலர் பாரம்பரிய முறைப்படி எனக்கு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது அச்சுறுத்தல் எதுவும் இல்லை. உலகை சுற்றி வரும் நான் துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். அவர்கள் எனது பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்த பயணத்தின் மூலம் புடவை அணிவது இந்தியாவின் பாரம்பரியம் என்பதை வெளிப்படுத்துவதுடன், இருசக்கர வாகனத்தில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்ற நிலையை மாற்றும் வகையில் அமைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது.
    • முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 'வீட்டில் இருந்து பணி செய்யும்' ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மேலை நாடுகளில் பரவலாக இருந்த இந்த முறை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள இதர தனியார் நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களை வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளன. அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் அனைவரது வீடுகளிலும் இருக்காது என்பதால் சில மாற்றங்களை வீட்டில் செய்து கொள்வது அவசியம். அப்படிப்பட்ட மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அளித்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

    உள்கட்டமைப்பும், அலுவலக சூழலும் உள்ள இடத்தில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை மாற்றியமைத்து பணி புரிவதற்கும் பல மாற்றங்களை, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது. வீட்டில் உள்ள ஒரு அறையை பணி புரிவதற்கேற்ப மாற்றம் செய்யும்போது லைப்ரரி, படிக்கும் அறை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

    ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் அமைத்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். அல்லது படுக்கை அறையின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். வெளி நபர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் வரவேற்பறையின் ஒரு பகுதியை பார்டிஷன் மூலம் பிரித்து பயன்படுத்தலாம்.

    அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்க உள்ள சுவரை ஒட்டிய பகுதியை தேர்வு செய்து பணியிடமாக அமைக்கலாம். மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றுடன், மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பணிபுரியும் அறை ஜன்னலுக்கு அருகில், செடிகள் வளர்ந்துள்ள வெளிப்பகுதி, மரங்கள் உள்ள பகுதியாக இருந்தால் கண்களுக்கு இதமாக இருக்கும். அலுவலகங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பரிசுகள் ஆகியவற்றை வீட்டில் பணிபுரியும் பகுதிகளில் வைக்க முடியும். பணிபுரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

    பணி இடத்துக்கு அருகில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து, தினமும் காலையில் அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்பினை எழுதி வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் பகுதியில் குறிப்புகளாக வைத்துக்கொண்டு பணிகளை செய்து வரலாம்.

    மனம் கவரும் நிறங்களில் லைட் செட்டிங் அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக நல்ல வெளிச்சமும், காற்றும் வரக்கூடிய ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன.

    பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கீடு என்பதை தவிர்க்க இயலாது. வீட்டில் உள்ள குழந்தைகளுடன், பக்கத்து வீட்டு குழந்தைகளும் அந்த சிக்கலுக்கு துணையாக அமைந்து விடுவார்கள். படிப்பு சம்பந்தமான பயிற்சி முறைகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். வளர்ப்பு பிராணிகளான நாய் அல்லது பூனை போன்றவை அங்கே உலாவுவதை அனுமதிக்கக்கூடாது.

    • ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும்.
    • தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும்.

    மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் மனதோடு தான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ, நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி அசை போட்டபடியோ பொழுதை கழிப்பார்கள். இதே மனநிலை நீடித்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்துவிடும். ஏதாவது ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும்.

    எதிர்மறை எண்ணங்களை கையாள்வதற்கு முன், அவற்றை அடையாளம் காண்பது முக்கியம். எந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் அடிக்கடி எழுகிறது? அதற்கான காரணம் என்ன? அதனை செயல்படுத்துவது சாத்தியமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும். மனதுக்குள்ளேயே சுய விமர்சனம் செய்து தேவையற்ற எண்ணங்கள் எழுவதை தடுக்க வேண்டும். அதையும் மீறி எழும் எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதற்கான சில வழிமுறைகள்...

    * ஒவ்வொரு நொடியும் கடக்கும்போது அந்த சமயத்தில் நடக்கும் விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதனை பயிற்சியாக மேற்கொண்டு வரலாம். நாளடைவில் கடந்த கால நினைவுகளோ, தேவையற்ற சிந்தனைகளோ மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கும் அனுமதிக்காது.

    * அறிவாற்றல், நடத்தையை மேம்படுத்தும் தெரபி சிகிச்சைகளையும் பெறலாம். இவை எதிர்மறையான சிந்தனைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நேர்மறையானதாக மாற்றவும் உதவும்.

    * எதிர்மறை சிந்தனைகள் எழும்போதெல்லாம் கவனத்தை திசை திருப்ப, மனதுக்கு பிடித்தமான விஷயங்களை நோட்டில் எழுதலாம்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை மட்டுமல்ல மன நலத்தையும் பேண உதவும். உடற்பயிற்சி செய்யும்போது வெளியிடப்படும் எண்டோர்பின் ஹார்மோன் இயற்கையாகவே மனநிலையை அதிகரிக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும்.

    * எதிர்மறை எண்ணங்களைப் பற்றி உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மனம் விட்டு பேசுவது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மனதுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

    * செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் எதிர்மறையான செய்திகளை படிப்பதை தவிருங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தூண்டக்கூடிய சூழல் நிலவினால் அங்கிருந்து விலகி இருங்கள்.

    * போதுமான தூக்கம், சரியான வேளையில் சாப்பிடுதல், விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    * வாழ்க்கையில் இலக்குகள் இருப்பது அவசியம். ஆனால் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அவை உருவாக்கினால் எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும். எனவே, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க, அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும். அதனை நோக்கி பயணிக்கவும்.

    * எதிர்மறையான சிந்தனையோ, பேச்சுக்களோ வெளிப்படும்போது நேர்மறை எண்ணங்களை தூண்டும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் வார்த்தைகள், நேர்மறையான விஷயங்களை சுட்டிக்காட்டும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் போன்றவற்றை படிக்கலாம்.

    ×