search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zadingi"

    • விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் ‘புலி...புலி...' என்று எச்சரித்தார்.
    • சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்கள் பற்றி சங்க இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். கோடரியால் புலியை வெட்டிச் சாய்த்த வீரப் பழங்குடியின பெண்ணை பற்றி இங்கே படிக்கப் போகிறோம்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர், லால் சாடிங்கி. 26 வயதான அந்த ஏழைப் பெண், காடுகளுக்கு சென்று விறகு வெட்டி பிழைத்து வந்தார்.

    ஒருநாள் அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் விறகு வெட்டுவதற்காக, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றார்கள். காய்ந்த விறகுகளைத் தேடிப் பிடித்து, வெட்டிக் கொண்டு இருந்தார்கள்.

    அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஓர் உறுமல் சத்தம் கேட்டது. லால் சாடிங்கி திரும்பிப் பார்த்தார். எந்த அசைவும் இல்லை. அது காட்டுப்பன்றியாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். மறுபடியும் உறுமல் சத்தம் ஓங்கிக் கேட்கவே அவர் அதிர்ந்து போனார். புதருக்குள் இருந்து வருவது புலி என்பதை உணர்ந்தார்.

    அருகில் விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் 'புலி...புலி...' என்று எச்சரித்தார். அவர்கள் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

    புலி அதற்குள்ளாக மிக அருகில் வந்து விட்டது. எப்படி தப்பிப்பது? அந்தப் பெண்ணுக்கு வழி தெரியவில்லை. ஒரே பாய்ச்சலில் அவர் உயிரைப் பறிக்க புலிக்கு ஒரு வினாடிகூட ஆகாது. அந்த அளவில் அருகில் நெருங்கிவந்தது.

    கையில் விறகு வெட்டும் கோடரி மட்டும் அவரிடம் இருந்தது. வாழ்வா? சாவா? என்ற கேள்வி மனதில் எழுந்தது. மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு, ஓங்கி ஆக்ரோஷத்தில் ஒரே வெட்டாக புலியை தலையில் வெட்டிச் சாய்த்தார். நல்ல வேளையாக ஒரே வெட்டில் கதை முடிந்தது. அந்தப் பெண்ணுக்கு வாழ்வும், புலிக்கு சாவும் உறுதியானது.

    விறகு வெட்டப்போன இடத்தில் புலியை வெட்டிக்கொன்ற இளம்பெண் லால் சாடிங்கி பற்றி ஊரெல்லாம் பேசியது. அவர் வீரப் பெண்மணியாக போற்றப்பட்டார். அவர் வெட்டி சாய்த்த புலி 'மம்மி'யாக பாடம் செய்யப்பட்டு மிசோரம் தலைநகர் ஐசால், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இன்னமும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    அந்த வங்கப் புலியை வெட்டிச் சாய்த்த வீரப்பெண் லால் சாடிங்கி 72 வயதை எட்டி இருந்தார். சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் கடந்த நிலையில், சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

    புலியை அதன் வாழ்விடத்துக்கே சென்று தன்னந்தனியாக வீழ்த்திய அந்த பெண்மணிக்கு மிசோரமே வீரவணக்கம் செலுத்தியது.

    ×