என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலை"
- இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
- தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
இதற்கிடையே தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கண்டிஷன் போட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.
புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.
- வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
- வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது.
வக்பு சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துகளின் பாதுகாப்புக்கும் உதவும்.
வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
- பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைவர் நியமனம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியவரும் சந்திக்க உள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
- ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும்.
சென்னை:
வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ஃப் மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் தி.மு.க.வின் துரதிர்ஷ்டம் மிகவும் கணிக்கத்தக்கதாகிவிட்டது! இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
அவர்களின் நாடகத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு "2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத தி.மு.க. ஒருவரை நியமிக்கும். தி.மு.க இதை ஒரு தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து, 2026 சட்டமன்ற மற்றும் 2029 பாராளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும்.
ஏமாற்றவும் பிரிவினைப்படுத்தவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
- ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
- ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.
கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?
காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு.
கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் மோடி அரசு. மோடி அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.
2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.
இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.
இதையடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் என்று பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.
- கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியாதவது:-
நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சரின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைகின்றேன்.
திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.
ஆனால் திருச்சியில் உள்ள நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும். ஏன் என்றால் விஜய் என்னுடைய எதிரி திமுக தான் என்று சொன்னார். அதை முதல் முதலில் 1958ல் சட்டசபையில் என்னுடைய ஒரே எதிரி திமுக தான் என்று காமராஜர் சொன்னார்.
அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.
கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மாதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.
ஆனால் அமித்ஷாவோ கூட்டணியை பற்றி பேசினோம் என்று சொல்கிறார்.
நமக்கு இருக்குற ஒரே காமெடி அண்ணாமலை. அவரையும் மாத்திடாதீங்க.. அந்தக் கட்டுல எல்லாமே ஜோக்கர்தான் என அவர் கூறினார்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டுடன் திருத்தணி இணைந்த நாள் இன்று. அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறோம் .
வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். அவரது வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இந்த போராட்டம் என்று கேட்கிறார்கள்.
அடுத்த தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கும் கல்வித்துறையை சீரழித்து வருவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழி கொள்கைகள் தான் உள்ளன. இப்போது தேர்தல் வரும்போது மும்மொழி திட்டத்தை கொண்டு வருவது ஏன்?
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. இவற்றை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். யாரோ வாய்க்கு வந்தபடி கூறியதை கேட்டு அள்ளித் தெளிக்க கூடாது. டிக்கி நிறுவனம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கழிவுகளை அகற்றி விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளை தேர்வு செய்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளனர். இதில் பணியாற்றும் ஒருவர் எனது உறவினர். அவ்வளவுதான் மற்றபடி எனக்கும் இந்தத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் சொல்லப் போனால் உங்கள் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டிய திட்டத்தை அண்ணாமலை தவறு நடந்திருப்பதாக குறை கூறுகிறார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. அதே போலதான் இந்த திட்டத்திலும் தவறு நடப்பதாக கூறுகிறார். உங்களிடம் விசாரணை அமைப்புகள் உள்ளன.
அதன் மூலம் உண்மையை அறிந்து பேச வேண்டும்.எதையும் அரைகுறையாக பேசக்கூடாது. இந்தத் திட்டத்தில் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டது என தேர்வு செய்து மத்திய மோடி அரசு விருது வழங்கி இருக்கிறது. அப்படியானால் தவறாக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, இதயத்துல்லா, தளபதி பாஸ்கர் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
- குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
டெல்லி சென்றார். அங்கு பளார்... பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.
இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.
வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம்.
அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.
குறைகளே சொல்லக்கூடாது என்பது அல்ல. குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
ஆகவே அவர் கூறிய அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுகின்ற எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.
- அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசுகையில், பல பொய் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க., அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும். தி.மு.க.வின் பிரச்சனைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பா.ஜ.க. வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை என்று விமர்சித்து இருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், என் மாமனார் காசுல நான் வாழல.. லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல.. சொந்தமா உழைச்சு சுயம்புவாக உங்க முன்னாடி நிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா குறித்த அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு இதர அரசியல் கட்சிகளுடன் பயணித்து வருகிறார்.
மேலும் ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
- பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
- ஏற்கனவே இந்தப் பகுதிகளில் சுமார் 50,000 விசைத்தறிகள் செயலிழந்து போயுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் மூலம் சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறி கூலிகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.50 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே உயர்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று, விசைத்தறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண உயர்வு. வாடகை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பதினைந்து மாதங்களாக, கூலி உயர்வு கோரி, பத்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டாததால் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக கடந்த பதிமூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ₹30 கோடி என சுமார் ரூ.390 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் பகுதிகளில் சுமார் 50,000 விசைத்தறிகள் செயலிழந்து போயுள்ளன. கூலி உயர்வு வழங்கப்படாவிட்டால், மேலும் விசைத்தறிகள் உற்பத்தியை இழந்துவிடும் விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவும்படியும், அதன் மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படியும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
- அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட் டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-
நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.
கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.
என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.
அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.
எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.
அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.
ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.
இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.
எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.