என் மலர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"
- ஆவணங்களின் நகலை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்.
- தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையைத் தொடர்ந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.
வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர்.
- கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
- கல்லூரி சார்ந்த ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றனர். சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார்.
புதுடெல்லி:
கோவையை பூர்வீகமாக கொண்ட லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்ததாக, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் அவருக்கு லாட்டரி விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடிவரை வருமானம் கிடைப்பதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது. இதனை அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். மேலும் கொச்சி, கொல்கத்தாவில் தனியார் நிறுவனங்களை தொடங்கி, அவற்றின் மூலம் லாட்டரி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக அவருக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்கும், கொல்கத்தா போலீசார் 2 வழக்குகளும் தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து லாட்டரி முறைகேடு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1500 கோடிஅளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மேகாலயா அரசு கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மார்ட்டினுக்கு சொந்தமாக உள்ள கோவை, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.12 கோடி ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் துபாய், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.6.4 கோடி மதிப்பில் பணத்தை முதலீடு செய்து உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது.
மார்ட்டின் லாட்டரி தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல்கட்சிகள் மூலம் நெருக்கடி வரலாம் என்பதை மார்ட்டின் உணர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் மேற்கண்ட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்கோடி-கோடியாக பணத்தை வாரி இரைத்து உள்ளார்.
அதாவது கடந்த 2019-ம்ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை மார்ட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி வரை பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அமலாக்கப்பிரிவு சேகரித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1592 கோடியை வழங்கிய மார்ட்டின், தனக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மூலம் ரூ.542 கோடியை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சிக்கு ரூ.154 கோடி, பாஜகவுக்கு ரூ.100 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடி என்று தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்ட்டின் பணத்தை அள்ளி வீசியது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மூலம் தெரிய வந்து உள்ளது.
நாடு தழுவிய அளவில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதற்காக மார்ட்டின் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை தொடங்கி உள்ளார். மேலும் பல்வேறு சிறப்பு வாகனங்களை பயன்படுத்தி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மார்ட்டினுக்கு சொந்தக்காரர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டு அடங்கிய பண்டல்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் இந்திய அளவில் லாட்டரி விற்பனை மூலம் மார்ட்டினின் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இருப்பினும் அவர் குறைந்த அளவே வருவாய் கிடைத்ததாக கணக்கு காட்டி ஏமாற்றி வந்தது அமலாக்கப்பிரிவு விசாரணை மூலம் தெரியவந்து உள்ளது.
சிக்கிம் மாநில லட்டரி மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்த மார்ட்டினுக்கு மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து 90 சதவீதம் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கேரளா, பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் லாட்டரி தொழிலை விரிவுபடுத்தி பில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதித்தது தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துணைநிலை ஆளுநரின் அனுமதியை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது
- டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா இதை வரவேற்றுள்ளார்.
கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடந்த அமலாக்கத்துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கைக்கு வி.கே. சக்சேனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இந்த ஒப்புதல் வந்துள்ளது. சில உரிமதாரர்களுக்கு சாதகமாக மதுபானக் கொள்கை விதிகளை மாற்றியமைத்து, நிதி முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக கெஜ்ரிவாலின் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கெஜ்ரிவாலுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றச்சாட்டின் கீழ் ஒரு வழக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது, ஆனால் விசாரணை தொடங்கப்படவில்லை.
பணமோசடி வழக்குகளில் அரசுப் பதவிகளை வகிக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடர துணைநிலை ஆளுநரின் அனுமதியை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியதை அடுத்து, அனுமதிக்காக அமலாக்கத்துறை காத்திருந்தது. இந்நிலையில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா இதை வரவேற்றுள்ளார்.
முன்னதாக மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கெஜ்ரிவால் செப்டம்பரில் சிறையில் இருந்து வந்து தனது பதவியை ராஜினாமா செய்து எம்எல்ஏவாக தொடர்கிறார்.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
- அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியை ஆளும் பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்க புலனாய்வுத் துறையை பயன்படுத்துகிறது என மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது எதிர்க்கட்சி.
ஒரு சில மாநிலங்களில் முதல் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதே இந்தக் குற்றச்சாட்டிற்கு காரணம்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கெஜ்ரிவாலை கைதுசெய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்குகிறது பா.ஜ.க. மிரட்டல் விடுக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
ஜூன் 12-ம் தேதி அமலாக்கத்துறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமின் கிடைத்தது. செப்டம்பர் 13-ம் தேதி சிபிஐ வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது. 5 மாத சிறைவாசத்துக்குப் பின் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இதேபோல், போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தினார் என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை கைது செய்த, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இதனால் பிப்ரவரி 5-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து, 150 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 28-ம் தேதி ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
மேலும், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா சுமார் 17 மாதத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதே வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில், 165 நாளுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து கவிதா வெளியே வந்தார்
- 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
- செம்மண் முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து உள்ளனர்.
சென்னை:
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் செம்மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு போடப்பட்டது. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் செம்மண் முறைகேடு தொடர்பாக ரூ.28.36 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். செம்மண் முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து உள்ளனர்.
- மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
- பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு கோர்ட் அனுமதி.
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆன்டிகுவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும் அவருக்கு சொந்தமான ரூ. 2,565 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக இதுவரை 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
இதில் கிழக்கு மும்பை சாண்டா குரூசில் கெனி டவரில் உள்ள 6 அடுக்கு மாடி குடியிருப்புகள், டெல்லி மஹர்ஷத்ராவில் உள்ள சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மண்டலத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளும் அடங்கும்.
- விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
- 2 சம்மன்களில் மட்டுமே ஹேமந்த் சோரன் ஆஜரானார்.
ராஞ்சி:
ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த முறை ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக இருந்த கால கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 10 முறை சம்மன்கள் அனுப்பியது. இதில் 2 சம்மன்களில் மட்டுமே அவர் ஆஜரானார். மற்ற சம்மன்களை அவர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக அவர் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நேற்று ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
- லாட்டரி மார்டினின் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டது.
- இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி மார்டினுக்கு சொந்தமான 22 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1,300 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபலமானவர் கோவையை சேர்ந்த மார்ட்டின்
- மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தடை செய்தது. மேலும் இந்த நடைமுறை மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற அறிக்கையில் வெளியாகியது.
அதன்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1,300 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபலமானவர் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ. 910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, அரியானாவின் பரிதாபாத், பஞ்சாப்பின் லூதியானா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- லாட்டரி மார்ட்டினின் இல்லம், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். மருத்துவ கல்லூரியும் நடத்தி வருகிறார். துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.
தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.
இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.
கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.
அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
- அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.
அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.