என் மலர்
நீங்கள் தேடியது "எம்எஸ்வி"
- எம்.எஸ்.வி ஒரு கோரிக்கை வைத்தார்.
- சிறு குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவர்களைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பிற்கு இணையான ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்பும், மதிப்பும் வைத்திருந்தவர்கள் நவுஷத் அலி- எம்.எஸ்.வி. என்று பார்த்தோம்.
நவுஷத் அலி இசையமைத்த ஒவ்வொரு படம் வெளிவந்த பிறகும் அவரது இசையைப் பாராட்டி யாரையாவது வைத்து உருதில் எழுதி எம்.எஸ்.வி. அனுப்பிய கடிதங்களை நவுஷத் அலி புகழின் உச்சியில், பரபரப்பில் இருந்த நேரத்தில் படித்துப் பார்த்திருக்கக் கூட நேரம் இருந்திருக்காது என்பதுதான் உண்மை.
ஆனால், "கற்றோரை கற்றோர் காமுறுவர்" என்பதைப் போல தனது ஒவ்வொரு பாடலின் இசை நுட்பங்களையும் ரசித்துப் பாராட்டுபவர் என்பதை முதல் கடிதத்திலேயே உணர்ந்துவிட்ட நவுஷத் அலி, அந்த கடிதங்களை புதையலாக பாதுகாத்தார் என்பதை எம்.எஸ்.வி அறிந்துக் கொள்ளும், ஆனந்த வெள்ளத்தில் மிதந்த நாளும் வந்தது.
பம்பாய் (தற்போதைய மும்பை) சண்முகானந்தா அரங்கில் ஓர் தமிழ் திரைப்படக் கச்சேரி நிகழ்ச்சி செய்து தர விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் எம்.எஸ்.வி ஒரு கோரிக்கை வைத்தார். நிகழ்ச்சிக்கு நவுஷத் அலியை கலந்துக் கொள்ள செய்தால் போதும். பணம் கூட பொருட்டில்லை. அவரை சந்திக்க வேண்டும், வாழ்த்துகள் பெற வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார்.
விழா குழுவினர் நவுஷத் அலியிடம் இதைப்பற்றி தெரிவிக்க அவரும் சம்மதித்து விட்டார். வேறு வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பி விடுவதாக தெரிவித்தும் விட்டார். இதை கேள்விப்பட்ட எம்.எஸ்.விக்கு தனது முன்னுதாரண நாயகனை சந்திக்கப் போகிற மகிழ்ச்சி!
சிறந்த முன்னணி பின்னணிப் பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, பி. பி. ஸ்ரீநிவாஸ், நடிகர் சந்திரபாபு, பி. சுசீலா, ஜிக்கி ஆகியோர் படை திரண்டு பம்பாய்க்கு போனார்கள்.
இன்னிசை நிகழ்ச்சி பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே நடந்துக் கொண்டிருந்தது. இடையே மேடைக்குப் பேச வந்த நவுஷத் அலி, தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பையை மேடையில் பிரித்துக் கொட்டினார். மேடையில் கடிதங்கள் குவிந்துப் பரவின.
"இந்த கடிதங்கள் எல்லாம் என்னுடைய படப்பாடல்கள், பட இசை குறித்து, விஸ்வநாதன் மிக நுட்பமாக கவனித்து என்னைப் பாராட்டி எழுதியவை!! முதல் கடிதத்திலேயே இவரது திறமையை நான் புரிந்துக் கொண்டேன். பின்னாளில் இவர் உயர்ந்த இடத்தை அடைவார் என கணித்தேன். அது உண்மையாகிவிட்டது" என்று நவுஷத் அலி தன்னை பாராட்டியதாக சில நேர்காணல்களில் எம்.எஸ்.வியே சொல்லியுள்ளார்.

கி.பானுமதி கிருஷ்ணகுமார்
கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்புவதாக சொன்ன நவுஷத் மேடையை விட்டு இறங்கி பார்வையாளராக போய் உட்கார்ந்து மொத்த நிகழ்ச்சியையும் பார்த்தார். நடுவில் ஒரு துண்டு சீட்டை மேடைக்கு அனுப்பினார். அதில் அவர் பாடச் சொல்லி விரும்பிக் கேட்ட பாடல்? "ஓடும் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே"- என்ற "காத்திருந்த கண்கள்" படப் பாடல்!
துண்டு சீட்டைப் பார்த்தவுடன் எம்.எஸ்.விக்கு வியப்பு தாங்கவில்லை! இந்திப் பட உலகில் மிகப் புகழ்வாய்ந்த பரபரப்பான ஒரு இசை மேதை, இவர் எப்போது இந்த தமிழ் திரைப்பாடலைக் கேட்டார்? ரசித்து விரும்பி கேட்கிறாரே? உடனே சீர்காழி கோவிந்த ராஜனை அழைத்து, கவியரசரின் இந்த பாடலை பாடவைக்கிறார். குழல், தபலா, வயலின், துந்தனா என மிகக் குறைந்த இசைக்கருவிகள் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று!
மேடையில் நவுஷத், இங்கிருந்து சென்ற கலைஞர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு தேநீர் விருந்துக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்.
மறுநாள் குழுவினர் நவுஷத் வீட்டிற்கு போனார்கள். அவர்களுக்கு அங்கும் ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரது வீட்டில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி இசையமைப்பாளர்களின் இசை படைப்புகள், வாழ்க்கை குறிப்பு உள்ளிட்ட செய்திகள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த அளவில் சம கால பல மொழியின் இசையமைப்பாளர்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்த நவுஷத் பின்னாளில் எம்.எஸ்.வி. தமிழ் படங்களில் வழங்கிய அற்புதமான உயிரோட்டமான இசையின் தரத்தை என் இசையில் எட்ட முடியாது. என்னை அவர் குரு இடத்தில் வைத்திருப்பதாக சொல்கிறார். நான் தான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இதை உளமாற சொல்கிறேன் என்றார்.
இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை, முகத்துதிக்காக சொன்னவையில்லை, என்பதை மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த கர்ணன் பட இசையே சொல்லும். வட இந்தியர்களையே புருவம் உயர்த்த வைத்த இசை அது!
பி.ஆர்.பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்ற வரலாற்று நாயகர்களை முன்னிறுத்தி ஆவணப்படுத்தியவர். சிறு குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவர்களைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவர் மகாபாரதத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட கர்ணன் துரியோதனன் ஆகியோரை முன்னிறுத்தி கர்ணன் என்ற திரைப்படம் இயக்குகிறார். தயாரிப்பாளரும் இவரே.
கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் 13. இதில் மகாராஜன் உலகை ஆளுவான் என்ற படத்தில் இடம்பெறாத பாடல் போக மீதி 12 பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அத்தனையும் முத்துக்கள். நம் காதுகளையும் இதயத்தையும் கொள்ளை கொண்டு விடும். காலையில் கேட்டு விட்டால் அன்று முழுவதும் வேறு பாடல்களை கேட்க விடாமல் நம்மை வேட்டையாடும் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.
வட இந்தியாவில் நடைபெறும் கதை என்பதால் எல்லாம் இந்துஸ்தானி மெட்டில் அமைந்த பாடல்கள். இந்தப் படத்தில் இசையமைக்க வட இந்திய இசைக்கருவிகளான சாரங்கி செந்நாய் சரோத் சித்தார் ஆகியவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டன.
இந்தப் படத்தின் பாடல்களை தடையில்லாமல் கம்போஸ் செய்ய பந்துலு ஓர் உத்தியை சொன்னார். நீங்கள் இங்கு இருந்தால் வேறு வேலைகள் குறுக்கிடும். அதனால் உங்களுக்கு பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு வாரம் அறை எடுத்துத் தருகிறேன். அங்கே எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் பொறுமையாக பாடல் தயாரித்து தாங்க என்று சொன்னார்.

அவர்களும் அங்கு கிளம்பினார்கள். அவர் சொன்ன சூழல்களுக்கு கவியரசர் சொல்ல சொல்ல மொத்த பாடல்களும் எழுதி மெட்டும் அமைக்கப்பட்டு விட்டன. அதுவும் மூன்றே நாட்களில்..
கவியரசர் விசுவிடம் நாம் மூனே நாள்ல மெட்ராஸ் திரும்பினா ஏனோ தானோன்னு பாடல் வந்திருக்கும் என்று நினைப்பார்களோ என்று சொல்ல, பாடல்களை கேட்டால் அப்படி சொல்ல மாட்டாங்க என்று சிரித்து கொண்டே ஊர் திரும்பினார்கள்.
படத்தில் கர்ணன் சூரியனை வழிபடும் போது ஆயிரம் கரங்கள் நீட்டி என்று பாடுவதாக ஒரு பாடல் வரும். இந்த பாடலுக்கு ஆதித்ய இருதயம் என்ற ஸ்தோத்திரப் பாடலில் வரும் கருத்தினை வைத்து எழுத நினைத்ததால் கவியரசர் வேத விற்பன்னர்களை அழைத்து ஆதித்ய ஹிருதயத்தின் பொருளை கேட்டறிந்து அந்தப் பொருளை உள்ளடக்கி எழுதினார்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி பாடலை சிறப்பாக நமக்கு தருவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி மலைக்க வைக்கிறது. சூரிய துதிக்கு தமிழில் இதை மிஞ்சிய பாட்டே இல்லை எனலாம்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் தாயினும் சாலப் பரிந்தும் என்ற சொல்லாடல் இந்த பாட்டிலும் வரும்.
சூரியன் இல்லை என்றால் தாவரங்கள் இல்லை. உயிர்கள் வாழ உணவில்லை என்றால் எந்த உயிரினமும் ஏது.. படைக்கும் ஓர் உயிர் களுக்கெல்லாம் துணைக் கரம் தருவாய் போற்றி என்று வணங்குகிறார் கவியரசர்.
தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி.. சூரியன் பூமியை விட்டு கொஞ்சம் நெருங்கி இருந்தால் புல் பூண்டும் சாம்பல் ஆகும். கொஞ்சம் தள்ளி இருந்தால் கடல் நீரும் உறைந்து விடும். அதனால் தான் தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் என்று மெய்ஞானத்தில் விஞ்ஞானத்தையும் சேர்த்து எழுதிய கவியரசர் ஒரு யுக கவி.
இந்தப் பாடல் துதிப்பாடல் என்பதால் தம்பூரா இசை அடிப்படையில் வேத கோஷம் போலவே என வரும்.
கர்ணன் பட பாடல்கள் ஒவ்வொன்றை பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். அத்தனையும் தேன் மழை தான். இரவும் நிலவும் வளரட்டுமே என்ற கனவுப் பாடலிலும் ஒரு சிறப்பு உண்டு. எல்லா வரியும் மே என்ற எழுத்தில் முடியும். பின்னாளில் அவன் தான் மனிதன் பட பாடலிலும் மே என்ற எழுத்தில் முடியும் பாடல் உண்டு. அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடல் அது.
அவன் தான் மனிதன் படத்தில் இன்னும் ஒரு பாடல் கவியரசர் எழுதச் சொல்லி இயக்குனர் கேட்க, எம்.எஸ்.வி., கண்ணதாசனிடம் கவிஞரே இன்னொரு டூயட் எழுதணும். அவங்க மே மாத கடைசிக்குள்ளாக ரிலீஸ் பண்ணனுமாம் என்று நினைவு படுத்தினார்.
என்ன விசு, மே மேங்கர.. வா இந்தா பாட்டு என்று சொல்லித் தந்த பாட்டு தான், அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடல்.
இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் மே என்ற எழுத்து வரும்படி குறும்பாக முடித்திருப்பார். ஒரே ஒரு வரியில் மட்டும் மன்னனே என்று முடியும். அரிதான இலக்கிய நயம் மிகுந்த சொற்களுடன் கேட்கவே மிக இனிமை. ஒரு இடத்தில், அன்று கவிவேந்தன் சொல்வண்ணமே யாவும் உறவாகுமே என்று முத்தாய்ப்பாக ஒரு வரியை எழுதி இருப்பார். கவி வேந்தன் என்பது கவியரசர் தான்.
மிக அமைதியாக போகும் இப்பாடல் நடுவில் சிவாஜி குணமானவுடன் உற்சாகத்துள்ளல் இசையுடன் வந்து மீண்டும் அமைதியாக வருவது அழகு.
ஊடகங்கள் வந்த பிறகு பேசி பிரபலமானது இந்த பாடல். பேசாமலே பிரபலமானது இரவு நிலவும் வளரட்டுமே பாடல்.
தொடர்ந்து புதையல் எடுப்போம்...