search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல்"

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    கொடைக்கானல்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சாரமும் அதிக நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் மலைச்சாலையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் நகரின் பல பகுதிகளில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய டோபிகானல் பகுதி வழியாக ஓடும் நீரோடையில் நட்சத்திர ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் அதிகமாக வெளியேறுவதாலும் தொடர் மழையாலும் அதிகமான நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    இதனால் இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பவர்கள் முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாலை நேரத்தில் மழை அளவு குறைந்து கடும் பனிமூட்டம் நிலவியது.இதனால் நகரின் பல பகுதிகளில் அதிகமான பனிமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    மேலும் நீண்ட நேரம் இப்பனிமூட்டம் நீடித்தது.நட்சத்திர ஏரிப்பகுதியில் சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாக காணப்பட்ட பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    நட்சத்திர ஏரியை ஒட்டிய நடைமேடையில் கேரள கல்லூரி மாணவிகள் பனிமூட்டத்தை ரசித்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மிக நீண்ட நேரம் நீடித்த பனிமூட்டத்தை ஏரிச்சாலையை சுற்றி வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    அதன் பின்னர் நகர் பகுதியில் அவ்வப்போது பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.இன்று காலை மேகமூட்டம் கூட இல்லாமல் வெயில் தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர்.
    • அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அவ்வப்போது திடீரென கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    எதிரே யார் வருகிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.

    வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். பள்ளிக்கு செல்வதா வேண்டாமா என அரசு நிர்வாகம் மாணவ- மாணவிகளை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 8 மணி வரை அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு மத்தியில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    உள்ளூர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்காததால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

    அதிகாலை முதலே மின்சாரமும் இல்லை கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலைகிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    திண்டுக்கல்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.

    திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

    அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


    கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

    சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
    • நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.

    தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.

    அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

    நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.

    அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி.
    • மழையளவு குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும் கடும் பனிமூட்டமும் நிலவி வந்தது. இந்த சூழலை பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் சிறிது நேரம் பனிமூட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பகல் பொழுதிலும் பனிமூட்டம் நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    இதனால் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    நடந்து செல்பவர்கள் மீதும் பனி விழுவதால் உடல் நடுங்கியபடி செல்கின்றனர். தொடர்ந்து பனிமூட்டம் குறையாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    • கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.
    • கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

    பொதுநலன் கருதி மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இம்முடிவு வரும்18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    • கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை.
    • சோதனை சாவடிகளிலேயே சோதனை.

    கொடைக்கானல்:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. வார விடுமுறை காரணமாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.


    இ-பாஸ் மற்றும் வழக்கமான சோதனைக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருேக உள்ள சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை சுங்கச்சாவடி அருகிலேயே நிறுத்தி சோதனை செய்ததால் மற்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இ-பாஸ் குறித்து தெரியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் இ-பாஸ் பெறுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    மலைச்சாலையில் இ-பாஸ் சோதனை செய்வதால் குறுகிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு மற்றும் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும், பழனி அடிவார பகுதியிலும் கொடைக்கானல் வருவதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ் சோதனை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

    மேலும் நேர விரையமும் தவிர்க்கப்படலாம். எனவே அடிவாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலேயே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.
    • விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.

    கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது. நகர கூட முடியாமல் நீண்ட நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

    விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    • தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
    • அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் மழை பெய்து வந்தது. தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தரைப்பகுதியில் நிலவும் வெப்பத்தை விட இங்கு குறைவாக இருப்பதாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் வரை சுற்றுலா பயணிகள் இல்லாததால் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் அண்டை மாநிலமான கேரளாவில் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கேரள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்ததால் அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதில் அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அடுத்து வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
    • பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2 பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க வில்லை. தொடர்ச்சியாக இன்று கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.


    அதன் பின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும்.

    வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.

    எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.

    இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

    • மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.

    ×