என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக"

    • நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள்.
    • virtual warriors என்று நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர்.

    அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது:-

    ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது. அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.

    இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors. அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள்.

    கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றி...!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
    • 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.

    ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு வழக்கு தொடர்ந்தார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு தொடர்ந்த வழக்கில்," தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இதுதொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    சென்னை:

    மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார். 

    • அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    • யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை (14-ந்தேதி) அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.
    • மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை :

    வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இணைந்து போட்டியிடுவது நேற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    அந்த வகையில், மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி! என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள், ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.

    ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பா.ஜ.க. -தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.

    தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.

    பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

    2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும். 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.

    தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர்.

    நாம் ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.

    மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

    தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.

    எனவே பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி!

    அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாகை சூடுவோம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார். 



    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பூத் கமிட்டி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த நேற்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக மேற்கு மண்டலமான கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள்.
    • இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.

    * பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் தி.மு.க. தலைமையின் பொய்முக வரலாறு, அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது.

    * எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தேர்தல் அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது.

    * அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி (வாக்குறுதி எண்: 160) என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி மோசடிப் பிரசாரம் வேறு.

    * ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: அது ஒன்றிய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனர்.

    * பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.

    * அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர்.

    * இயலாமையை மறைப்பதற்காக, எல்லாவற்றிற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க. தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்.

    * இதோ இப்போது, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதலமைச்சர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறென்ன?

    *நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது சமரசமற்ற நிலைப்பாடு.

    * மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படுவதே நிரந்தரத் தீர்வு. சிறப்பு ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு என்றும் நாம் கூறினோம்.

    * நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமன்று. நிரந்தரமாக மக்கள் பக்கம் நிற்கும் நாம். எப்போதும் இப்படித்தான் எதிலும் தீர்வை நோக்கியே யோசிப்போம்.

    * வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது.

    * மக்கள் விழித்துக்கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது.

    * இதுவரை எம் மாணவச் செல்வங்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் தி.மு.க. தலைமை. மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.

    * தி.மு.க. தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.

    மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. நிச்சயமாக அது 2026-இல் நிகழும், நிகழ்ந்தே தீரும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்;
    • மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;

    தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.

    எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என கூறியுள்ளார். 



    • ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
    • தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் முன்னோடி மாநிலம்.

    தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார்.

    இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது.

    இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

    மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது.

    மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.

    தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று.

    மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
    • தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

    தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

    உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?

    ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

    பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.

    சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.



    ×