என் மலர்tooltip icon
    • பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
    • தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

    1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.

    அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

    தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார்.

    ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்டுவம் படத்தின் கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
    • பட காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

    அப்போது இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் ஆஜரானார். அப்போது பா.ரஞ்சித்தை நீதிமன்ற பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கில் 3 பேர் முன்ஜாமின் எடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    சென்னை:

    தூத்துக்குடியில் தயாராகி உள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற் சாலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.

    உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • சலம்பல பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

    இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது.
    • கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது.

    இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டு பிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ரையாடினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு புதிய தொழில் நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    இன்று அது வளர்ச்சி அடைந்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 'நான் முதல்வன்' திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னித், ஐடிஎன்டி மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஓய்வு) கமாண்டர் அமித்ரஸ்தோகி, ஜெட் வெர்க்கின் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜோஷ் போல்கர், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
    • அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக சத்தீஸ்கரில் இன்று பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்ப்பூர், துர்க் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • எதிர்க்கட்சியின் பாகிஸ்தானை காக்க விரும்புகின்றனர். இந்தியாவை காக்க விரும்பவில்லை.
    • பயங்கரவாதிகளின் இலக்குகளை அளிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    * பாகிஸ்தான் உடனான போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை.

    * பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியே எங்கள் தாக்குதல் என்று பிரதமர் மோடி அமெரிக்காவிடம் கூறினார்.

    * அமைதி வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சியதின் அடிப்படையில் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது

    * பாகிஸ்தான் உடனான போரை நிறுத்துவதற்கு யாரும் இடைத்தரகராக செயல்படவில்லை.

    * பயங்கரவாதிகளின் இலக்குகளை அளிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

    * எதிர்க்கட்சியின் பாகிஸ்தானை காக்க விரும்புகின்றனர். இந்தியாவை காக்க விரும்பவில்லை.

    * பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நிரந்தரமாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது.

    என்று தெரிவித்தார்.

    • நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

    நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
    • சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிளாம்பாக்கம்:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு (ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பஸ்களும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1-ந்தேதி 55 பஸ்களும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பஸ்களும், 2-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
    • சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    என் மகள் ஹரினி, கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஹரினி சூட்டிங்பால் விளையாட்டு வீரர். கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடை பெற்ற ஆசிய சூட்டிங்பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங்பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.

    பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் விளையாட்டு பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சர்வதேச போட்டிகளில் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

    சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சூட்டிங்பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் குழு விளையாட்டு ஆகும். இதற்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார்.

    விசாரணை முடிவில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ×