search icon
என் மலர்tooltip icon
    • ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை டெக்சாசின் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது.
    • ராக்கெட் சோதனையை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது.

    சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.

    ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது.

    இந்நிலையில், இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது.
    • அப்போது டொமினிகாவின் உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.

    ஜார்ஜ் டவுன்:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா விருதை வழங்கி கவுரவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது சரியான நேரத்தில் டொமினிகாவுக்கு உதவினார். அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம் என டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.

    • பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
    • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025, பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.

    இந்நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பிப்ரவரி 15-ம் தேதி ஆங்கிலம், 20-ம் தேதி அறிவியல், 27-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்.

    மார்ச் 10-ம் தேதி கணிதம், 13-ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளன.

    இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது.

    பிப்ரவரி 21-ம் தேதி இயற்பியல், 24-ம் தேதி புவியியல், 27-ம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது.

    பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
    • தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

    இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

    எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • இதில் 68 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுகட்டுகின்றன.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் இரு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த 2வது கட்ட தேர்தலில் 68.01 சதவீதம் வாக்குகள் பதிவானது என்றும், மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் 62.05 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • லாவோஸ் நாட்டில் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
    • சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வியன்ட்டியன்:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் லாவோஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்ட்டியனுக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார்.

    இதேபோல், ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜுன் சென்றுள்ளார். இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை மந்திரியை, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், வருங்காலங்களில் கல்வானில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மோதலுக்கு பதில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவேண்டும். 2020 மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், எல்லையில் அமைதி நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பிரதமர் நரேந்திர மோடி கயானா சென்றடைந்தார்.
    • அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறை பயணத்தின் மூன்றாவது கட்டமாக கயானா சென்றடைந்தார்.

    கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி சபையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர்.

    அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

    இந்நிலையில், கயானா அதிபர் முகமது இர்பான் அலி பிரதமர் மோடியைப் பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீங்கள் இங்கே இருப்பது எங்களின் மிகப்பெரிய மரியாதை. தலைவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு சாம்பியன். நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு வழிநடத்தியுள்ளீர்கள். வளரும் நாடுகளுக்கு நீங்கள் வெளிச்சத்தைக் காட்டியுள்ளீர்கள். மேலும் பலர் தங்கள் சொந்த நாட்டில் பின்பற்றும் வளர்ச்சி அளவீடுகளையும் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளீர்கள் என தெரிவித்தார்.

    56 ஆண்டுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

    • துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார்.
    • திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.

    முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற் கொள்ள உள்ளார். அதன்படி அவர் ஏற்கனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வை முடித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக அவர், வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் புறப்படுகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அதன் பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் திண்டிவனம் அருகே உள்ள தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து தீவனூர், கூட்டேரிப்பட்டு வழியாக விழுப்புரம் வருகைதரும் அவர், கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.

    இதனை தொடர்ந்து, மறுநாள் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.86 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அதன் பிறகு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து, அதன் அருகில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி, அவர் வருகை தரும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், திறப்பு விழா செய்யப்பட உள்ள பணிகளின் திட்ட விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள பயனாளிகளின் விவரம், தமிழ்நாடு அரசின் சாதனை விவரங்கள், விழா மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகளில் அந்தந்த துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 28-ந் தேதி இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்க உள்ளதால், சுற்றுலா மாளிகை மட்டுமின்றி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    • சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது.
    • சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா?

    இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

    இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே சீனாவில் மகாராஜா திரைப்படம் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அத்திரைப்படம் 2000 கோடி வசூலை கடந்தது.

    இந்நிலையில் சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×