என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருவாரூர் தியாகராஜர்-கமலாம்பாள் கோவில்
- ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-கமலாம்பாள் கோவில்
திருவாரூர் திருக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக் கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.
இவள் க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள், ஆகிய மூன்று தேவியரின் ஒருங்கிணைந்த ஒருமித்த சங்கமமாக கருதப்படுகிறாள்.
ஆதலால் புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாகவும் (காசி&விசாலாட்சி, காஞ்சி&காமாட்சி, மதுரை&மீனாட்சி,
ஆரூர்&கமலாலயதாட்சி, நாகை & நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் அருள்மிகு கமலாம்பாள் திகழ்கிறாள்.
மூன்று தேவியரும் ஒன்றாய் நிற்கும் அன்னையை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார்.
அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தினை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போல் காட்சி அளிக்கிறாள்.
இவளின் அருளை வியந்து திருவாரூர் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் "நவாவர்ண கீர்த்தனை" பாடியுள்ளார்.
அன்னையின் தவத்தினால் தான் வன்மீகநாதரே (புற்றிடங் கொண்ட பெருமான்) இத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள்.
இத்திருத்தலத்தில் அருள்மிகு கமலாம்பாள் திருக்கோவில் தனிக்கொடி மரம், தனித்திருமதில் கொண்டு தனிக்கோவிலாக உள்ளது மிகவும் சிறப்புடையதாகும்.
ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அன்னையை வலம் வந்தால் வேண்டியவருக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பாள் அன்னை கமலாம்பிகை என்பது ஐதீகம்.