search icon
என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • சுமார் 20 வருட காலத்திற்கு பிறகு தலிபான், ஆட்சியை கைப்பற்றியது
    • பெண்ணிய சிந்தனையாளர்களின் எதிர்ப்பை தலிபான் புறக்கணித்தது

    ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    ஆனால், 2001ல் அமெரிக்க ராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.

    கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.

    இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.

    கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.

    ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    • கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.
    • தூதரகத்தை மூடுவதற்கான மூன்று முக்கிய காரணங்களை ஆப்கானிஸ்தான் தெரிவித்திருந்தது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுத்து வந்தன.

    இதற்கிடையே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

    அப்போது,

    இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை.

    இந்தியாவிடமிருந்து ஆதரவு இல்லாததாலும், ஆப்கானிஸ்தானில் முறையான அரசாங்கம் இல்லாததாலும், ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. குழுவிற்குள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இது வேலையை பாதிக்கிறது.

    ஆகிய மூன்று காரணங்களை கூறியிருந்தது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

    • 73 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.

    73 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 7 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு.
    • குண்டு வெடிப்பு சம்பவத்தின் வீடியோ வெளியானது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியைட் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று மாலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 7 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    காபூல் காவல்துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன், "காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும்" கூறினார்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தின் வீடியோ வெளியானது. அதில், ஒரு கட்டிடத்தின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறுவதையும், உள்ளே தீப்பிழம்புகள் எரிவகையும் காட்டியது. சாலை முழுவதும் உடைந்த கண்ணாடி மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடப்பதை காண்பித்தன.

    • சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
    • பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

    பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.

    இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தா னுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.

    இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

    சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 2வது நிலநடுக்கம் இதுவாகும்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
    • சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் இடையில் சிக்கினார்கள்.

    ஜிண்டாஜன்,ஜோர்ஜான் மாவட்டங்கள் தான் இந்த நிலநடுக்கத்துக்கு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இங்குள்ள 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உயிர் இழந்து விட்டனர்.

    இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    இதில் தோண்ட, தோண்ட பலர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் 300 பேர் வரை இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் நடந்து வரும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக அதிகரித்து உள்ளது. 9,240 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரி வளாகத்திலும் தற்காலிமாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    சிகிச்சையில் உள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் இந்த நிலநடுக்கத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவரும்.

    இந்த நிலநடுக்கத்தால் ஹெராட் மாகாணத்தில் உள்ள கிராமங்கள் சின்னா பின்னமாகி உருக்குலைந்து காணப்படுகிறது. 1,320 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகி கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 50 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    • நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களிலும் விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக உயரமான கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடந்தது. மீட்பு பணியின் போது பிணங்களாக வந்து கொண்டிருந்தன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்பட்டது.

    இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளனர். இதை தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது, 'நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 12 ஆம்புலன்சுகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

    இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், 'ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்' என்று கூறப்பட்டு உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்று கூறியுள்ளனர்.

    • பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
    • பலர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குளுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

    இதைதொடர்ந்து, ஹெராட் பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்னும் பலர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரமான ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கி.மீ (25 மைல்) தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டது" என்றது.

    • ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்திற்கு ஏற்ப என்ஜிஓக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் பணியாற்றுவதைத் தடுப்பது உட்பட மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பொது சமூக வாழ்க்கையின் பல முன்னாள் நபர்களிடமிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 18 பணியாளர்களை தலிபான் கைது செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கிறிஸ்தவ மிஷனரிப் பணிகளை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி, ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்துள்ளதாக அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள அதன் அலுவலகத்திலிருந்து அதன் பணியாளர்கள் தலைநகர் காபூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை சர்வதேச உதவித் திட்டம் உறுதிப்படுத்தியது.

    பாதுகாப்பு மற்றும் உளவுப் படைகள் இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," கிறிஸ்தவ மதத்தில் சேர மக்களை அழைப்பதாகக் காட்டும் ஆவணங்களும் ஆடியோக்களும் பெறப்பட்டன. வெளிநாட்டவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை" என்றார்.

    • கிறிஸ்தவத்தை பரப்புதல், ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு
    • இதுகுறித்து என்.ஜி.ஓ. அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரத்தில் தலையிட்டு கல்லூரிக்கு பெண்கள் செல்லக் கூடாது, அழகு நிலையத்தில் பணிபுரியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தது.

    மேலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 18 ஊழியர்களை பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச உதவி பணி என்ற அமைப்பு, "தங்களுடைய 18 ஸ்டாஃப்களை தலிபான் பிடித்து வைத்துள்ளது. மத்திய கோர் மாகாணத்தில் உள்ள இரண்டு என்.ஜி.ஓ. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களை தலிபான் பிடித்துள்ளது. அவர்கள் காபுல் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஸ்டாஃப்களை பிடித்துச் செல்லவதற்கான காரணம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

    ஆப்கான் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    கிறிஸ்தவத்தை பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் உள்ளிட்ட ஸ்டாஃப்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

    இந்த குற்ற்சாட்டுக்கு அமெரிக்கா, என்.ஜி.ஓ. ஆகியவை பதில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த என்.ஜி.ஓ. சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மட்டும் பணியாற்றி வருகிறது.

    ×