search icon
என் மலர்tooltip icon

    அல்பானியா

    • இத்தாலிக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
    • இதனால் அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு போர் நடைபெற்றது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். இதனால் நடுக்கடலில் படகு கவிந்து உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்றது.

    ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்தன. மத்திய தரைக்கடல் கரையோர நாடான இத்தாலிதான் இவர்களை வரவேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி வந்தது. ஆனால் வருடத்திற்கு வருடம் புலம்பெயர்வோரின் வருகை அதிகரித்து வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த சிக்கலை தீர்க்க இத்தாலி அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அல்பேனியாவும் புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பம் கொடுப்பவர்களை ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இத்தாலியின் சுமை ஓரளவு குறையும்.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தை அல்பேனிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்றபோதிலும் இன்று பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. என்றபோதிலும், போதுமான வாக்குகள் பதிவாக பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

    இந்த ஒப்பந்தத்தின்படி ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு அல்பேனியா அடைக்கலம் கொடுக்க முடியும். அதன்பின் அகதிகளாக இருக்க விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு வருடத்தில் அடைக்கலம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொடக்கூடும் எனக் கூறப்படுகிறது.

    இரு நாட்டின் ஒப்பந்தத்தின்படி, இந்த செயல்முறை முழுவதும் அகதிகளுக்கு இத்தாலி சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டால் அவர்களை வரவேற்கும் அல்லது மறுத்தால் அல்பேனியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யும்.

    கடந்த ஆண்டில் மட்டும் 2022-ஐ காட்டிலும் 50 சதவீதம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். 1,55,750 பேர் இத்தாலி கடற்கரைக்கு வந்துளற்ளனர். இதில் 17 ஆயிரம் சிறுவர்கள் துணையின்றி வந்துள்ளனர். 2022-ல் 1,03,850 பேர் வந்துள்ளனர்.

    ×