ஆன்மிக களஞ்சியம்

தர்ப்பணம் முக்கியம்!

Published On 2023-06-26 11:18 GMT   |   Update On 2023-06-26 11:18 GMT
  • எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
  • ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

வெற்றிலை அலங்காரம்!

ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் உண்டு. வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர். சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பர்.

பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று, அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் வெற்றிலைப்படல் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

தினந்தோறும் அமாவாசை!

மயிலாடுதுறைக்கு அருகில் சிதலப்பதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அமாவாசை கோவில் என்று ஓர் ஆலயம் உள்ளது. இதில் மனிதமுக விநாயகர் அருள்கிறார். இக்கோவிலில் முக்தீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இவரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இவர்கள் அருகருகே உள்ளதால், இக்கோவில் முன்பு ஓடும் அரசலாற்றில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம். இதை 'நித்ய அமாவாசை' என்பார்கள். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம். சூரிய, சந்திர தீர்த்தங்கள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு சிராத்தம் செய்வது, கயாவில் சிராத்தம் செய்ததற்கு ஒப்பாகும்.

ஆடியில் அவதாரம்!

* ஆடிப்பூரம், உமாதேவிக்கு விசேஷமான நாள். தேவியின் ருது சடங்கு நிகழ்ந்த தினம் என்று புராணம் சொல்வதால், அன்று சிவாலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று வளைகாப்பு நடத்துவார்கள்.

* சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். ஆடி மாதத்தில் தான் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பியதாக புராணம் கூறுகிறது.

* பட்டினத்தார், ஆடி மாத உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். புகழ்ச்சோழர், பெருமழைக்கதும்பர், சேரமான் பெருமான், கழறிற்றறிவார், கோட்புலியார் போன்ற நாயன்மார்களும் ஆடி மாதத்தில் அவதரித்தவர்கள்தாம்.

Tags:    

Similar News