எதிர்பார்ப்புகள் நிறைவேறும்! குரு கடாட்சம் நிறைந்த தனுசு ராசியினருக்கு குரோதி வருட புத்தாண்டு நெருக்கடிகள் விலகி செயல்களில் முன்னேற்றம் உண்டாகும் வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள்.
சஷ்டம குருவின் பலன்கள்:
தனுசு ராசிக்கு ராசி அதிபதி மற்றும் 4ம் அதிபதியான குரு பகவான் மே 1, 2024 முதல் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். 6ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானம். ராசி அதிபதி சுக ஸ்தான அதிபதி குரு உப ஜெய ஸ்தானமாக இருந்தால் கூட 6ம்மிடம் செல்வது சற்று சுமாரான பலன் தான். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள்.அதே நேரத்தில் குரு நின்ற இடம் சுமாராக இருந்தால் கூட பார்வை பதியும் இடங்கள் நல்ல பலனைத் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
6ம்மிடத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். இது வரை தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தொழில் துவங்க அல்லது தொழில் விரிவாக்கம் செய்யத் தேவையான முதல் அரசுடைமை வங்கிகளில் கிடைக்கும். சட்ட ரீதியான சிக்கல்கள் விலகும். குடும்பம். தழைக்க ஆண் வாரிசு பிறக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும்.
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.தலைமைப்பதவி தேடி வரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். குறிப்பாக மருத்துவத் துறை படிப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம்.
சகாய ஸ்தான சனியின் பலன்கள்:
தனுசு ராசிக்கு 2, 3ம் அதிபதி சனி. தனம், வாக்கு. குடும்ப ஸ்தான அதிபதி. சகாய ஸ்தான அதிபதி. புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.
அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். குடும்ப பிரச்சனைகள் அகலும்.ராசிக்கு 3ல் நிற்கும் சனியின் 3ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும்.அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும்.
மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். சனியின் 7ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள்.
தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறக்கும்.
சுக ஸ்தான ராகு / தொழில் ஸ்தான கேது:
4ம்மிடமான சொத்து சுகம், வீடு, வாகனம் பற்றிக் கூறுமிடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை வாங்குவார்கள்.
சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். தாய், மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.
ஆரோக்கியம் முன்னேற்றமடையும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள் தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.
இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் பொங்கும்.
பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள். 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். இப்பொழுது 10ல் உள்ள கேதுவால் எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.
பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு.
மூலம்:
கேதுவின் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு குதூகலமான இருக்கும்.தடைபட்ட பணிகள் துரிதமாகும். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் செல்வாக்கு சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.
திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகனம் என சுப பலன்கள் நடக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும்.
சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் செலவால் மனச் சஞ்சலம் இருக்கும். உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.
பூராடம்:
சுக்ரனின் பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டு மன நிறைவு, மன நிம்மதி மகிழ்ச்சியை அதிகரிக்கும் வருடமாக அமையும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும். புதிய சிந்தனைகள் உதயமாகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.
மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களின் சகோதர, சகோதரி திருமணத்தை ஏற்று நடத்துவீர்கள்.வியாபாரம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. தாராளமான வரவு, செலவு காணப்படும். கடன் பிரச்சினை குறையும். வீடு, நிலம், வாகனம் போன்றவைகள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.உடல் நிலை தேறும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் 1:
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் தடைகள் விலகும். பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவதால் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.
தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.புதிய சொத்துக்கள் சேரும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபட வம்பு, வழக்குகளிலிருந்து மீள்வீர்கள்.
திருமணம்:
இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.
பரிகாரம்:
கால புருஷ 9ம் அதிபதி குருவின் வீடான தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு சித்தர்கள் வழிபாடு எளிதில் பாவ விமோசனம் பெற்றுத்தரும். பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான். தற்போது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது.
பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்கன்பட்டி சித்தர் ஆலயம். கலியுகத்தில் பலர் நேரில் சந்தித்து ஆசி பெற்ற மகான். சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே ஒருவிதமான புதிய உணர்வுடன் கூடிய அதிர்வலைகள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். இந்த சித்தரின் ஆலயத்திற்கு சென்று வந்தால் உங்கள் பாவம் கரைந்து நிம்மதி உண்டாகும்.