'சாவா' படத்தில் சாம்பாஜியை சித்ரவதை செய்யும் அவுரங்கசீப்.. ஸ்க்ரீனை கிழித்த குஜராத் நபர் - வீடியோ
- வெளியான 4 நாட்களில் 140 கோடி வசூலித்துள்ளது.
- இரவு கடைசி ஷோ ஓடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
முகலாய மன்னர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான 4 நாட்களில் 140 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தில் சாம்பாஜி கதாபாத்திரத்தை அவுரங்கசீப் கொடுமைப்படுத்தும் சீனில் ரசிகர் ஒருவர் திரையரங்கில் ஸ்க்ரீனை கிழித்த சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தின் பரூச் (Bharuch) பகுதியில் உள்ள ஆர்.கே. சினிமாஸ் தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைசி ஷோ ஓடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் குடிபோதையில் படம் பார்த்து கொண்டிருந்த ஜெயேஷ் வாசவா என்ற நபர் அந்த காட்சியின்போது மேடையில் ஏறி, தீயை அணைக்கும் கருவியால் திரையை சேதப்படுத்தி, பின்னர் அதை கைகளால் கிழித்துள்ளார்.
அவரது செயல் தியேட்டருக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. திரையரங்க ஊழியர்கள் அவரை வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.