சினிமா செய்திகள்
null

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை கைது செய்த போலீசார்

Published On 2025-01-17 11:24 IST   |   Update On 2025-01-17 11:27:00 IST
  • 12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.
  • பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை, பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சாரண் என்ற 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேலே உள்ள 4 தளங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் ஆவார். நேற்று முன்தினம் இரவு சைஃப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். தலா 3 படுக்கை அறைகள் கொண்ட அந்த 13 மாடி கட்டிடத்தின் வீடுகளில் 11 வது மாடி வீட்டில் சைஃப் அலிகான், கரீனா கபூர் தம்பதி ஒரு அறையிலும், மகன்கள் தைமூர் ஒரு அறையிலும், ஜெகாங்கீர் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டதால் நடிகர் சைஃப் அலிகான் கண்விழித்தார். கரீனாகபூர் தனது மகன்கள் அறைக்கு சென்றுவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தபடி புரண்டு படுத்தார். ஆனால் சத்தம் அதிகரிக்கவே ஏதோ விபரீதம் நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தார்.

அப்போது வேலைக்கார பெண் எலியம்மா பிலிப் மர்ம நபர் ஒருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சைஃப் அலிகான் யார் நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்றார்.

அப்போது அந்த மர்மநபர் நடிகர் சைஃப் அலிகானிடம் எனக்கு ரூ. 1 கோடி பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து அந்த மர்ம மனிதனுக்கும் நடிகர் சைஃப் அலிகானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைஃப் அலிகான் மீது சரமாரியாக குத்தினான்.

முதல் கத்தி குத்து சைஃப் அலிகானின் கழுத்தில் விழுந்ததால் அவர் நிலை தடுமாறினார். அடுத்தடுத்து மார்பு, இடுப்பு, முதுகு மற்றும் கால்களில் குத்திய அந்த நபர் மற்ற அறைகளின் கதவை வெளியில் பூட்டி விட்டு சைஃப் அலிகானை மிரட்டினார்.

பிறகு அந்த நபர் சைஃப் அலிகானின் மகன் ஜெகாங்கீர் தூங்கி கொண்டிருந்த அறை வழியாக வெளியேறி மழைநீர் குழாய் வழியாக இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சத்தம் கேட்டு மற்ற பணியாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கும் சைஃப் அலிகானின் மகன் இப்ராகீமுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிகாலை 3 மணிக்கு வந்து ஆட்டோ மூலம் நடிகர் சைஃப் அலிகானை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் முதுகில் மர்ம நபர் குத்திய கத்தியின் முனை 3 அங்குலத்தில் முறிந்து பாய்ந்து இருந்தது. அதை டாக்டர்கள் அகற்றினார்கள்.



சுமார் 2 மணி நேர சிகிச்சைக்கு பிறகு நடிகர் சைஃப் அலிகான் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் நேற்று போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த நபர் பணியாளர்கள் 6 பேரில் ஒருவருக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பணிப்பெண்களில் ஒருவரான எலியம்மா பிலிப் மர்ம நபருடன் நீண்ட நேர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரிடம் போலீசார் நேற்று 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் மர்ம நபர் எப்படி நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் வந்தான். எப்படி தப்பி சென்றான் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் சில பகுதிகளில் மட்டும் தான் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கேமராக்களில் அந்த மர்மநபர் சிக்கவில்லை. என்றாலும் 6-வது மாடியில் இருந்துஅந்த நபர் மாடிப்படிகளில் இறங்கி செல்வது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

இதன்மூலம் அந்த நபர் பற்றி அடையாளம் தெரிந்துள்ளது. அவரை கைது செய்ய 10 தனிப்படைகளை மும்பை போலீசார் அமைத்து உள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

நடிகர் சைஃப் அலிகானின் வீடு 11, 12, 13-வது மாடிகளில் அமைந்திருக்கிறது. அவ்வளவு எளிதில் அந்த வீட்டுக்குள் யாரும் செல்ல இயலாது. அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே அந்த கட்டிடத்தின் நுணுக்கங்கள் தெரியும்.

எனவே கட்டிட பணியாளர்கள் யாராவது இந்த செயல்களில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.



உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News