
null
நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
- மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
- பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்த மகா கலைஞனின் கம்பீர குரல் இன்று தனது ஒரே மகனான மனோஜ் மறைவு அவரை நொறுங்க செய்து விட்டது.
மனோஜ் மறைவு குறித்து தகவல் அறிந்ததும் சேரன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, நாஞ் சில் பிசி அன்பழகன் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.