சினிமா செய்திகள்
null

கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'அஃகேனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published On 2025-02-18 18:47 IST   |   Update On 2025-02-18 19:48:00 IST
  • நடிகை கீர்த்தி பாண்டியன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
  • கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.

நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், '' அஃகேனம் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு , பாண்டிச்சேரி தவிர்த்து வட இந்தியாவிலுள்ள சில முக்கியமான பகுதிகளிலும் நடைபெற்றது. இப்படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் தேசிய அளவில் விருது பெற்ற ஓடிஸி நடன மேதை திரு. கங்காதர் நாயக் மற்றும் அவரது குழுவினருடன் ஏராளமான வட இந்திய நாட்டிய கலைஞர்களும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார்கள். 'அஃகேனம்' திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே அருண்பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இதற்கு முன் 'அன்பிற்கினியாள்' எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது என்பதும், மீண்டும் இருவரும் ' அஃகேனம்' எனும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News