சினிமா செய்திகள்
null

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக ₹ 15 லட்சம் நிதியுதவி வழங்கிய கார்த்தி

Published On 2024-12-08 14:24 GMT   |   Update On 2024-12-08 14:27 GMT
  • நடிகர் கார்த்தி ஃபெஞ்சல் புயல் பாதிப்பிற்காக நிவாரணம் வழங்கினார்.
  • கார்த்தி தற்பொழுது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி அவர்கள், ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, பதினைந்து இலட்சம் (ரூ. 15,00,000) ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,

குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளதால் இப்புயலில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைவிட கள நிலவரம் மிக மிக மோசமானதாக உள்ளது.

விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. விவசாயத்திற்கு தேவைப்படும் மொத்த அமைப்பும் ஒரே இரவில் சீர்குழைந்துள்ளது.

ஏற்கனவே தங்கள் விளைப் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தங்கள் உழைப்பை கொடுத்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மொத்தமாக இப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மத்திய மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைப் பொருட்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளுக்கு உரிய மதிப்பீட்டை ஆராய்ந்து இழப்பீட்டை வெகு விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையான விவசாயத்தையும், அதற்கான பிற பணிகளையும் மீண்டும் தொடங்க பெருந்துணையாக இருக்கும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் இழப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முதல்படியாக என் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15,00,000/- (பதினைந்து இலட்சம்) நிவாரணத் தொகையாக அளிக்கிறேன்.

கார்த்தி தற்பொழுது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News