வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கூடாது... சிங்கமுத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
- இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
- சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் பேட்டி, வீடியோக்களை நீக்கும் படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.