Recap 2024

2024 ரீவைண்ட்: விஜயின் அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்...

Published On 2024-12-22 03:32 GMT   |   Update On 2024-12-22 03:32 GMT
  • விஜயின் படங்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி உள்ளன.
  • விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார்.

நடிகர் விஜய் தனது 10-வது வயதில் 'வெற்றி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனமாக அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்து உள்ளார். மேலும் 34 பாடல்களை பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.

இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவரது படங்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி உள்ளன. 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள் உட்பட 50 விருதுகளை பெற்றுள்ளார்.



விஜய் தனது 10ஆவது வயதில் 'வெற்றி' என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'இது எங்கள் நீதி' திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்.



ஆனால் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் வெற்றித்திரைப்படமாக மாறி விஜய்க்கு நற்பெயர் கிடைத்ததுடன் ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுத்தந்தது. அடுத்து 'லவ் டுடே' , 'ஒன்ஸ்மோர்', 'நேருக்கு நேர்' என பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின.

பாசில் இயக்கிய 'காதலுக்கு மரியாதை', காதலை வேறு விதமாக சொல்லும் திரைப்படமாக அமைந்தது. மேலும், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றுத்தந்தது. இன்று வரை காதலை கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருந்து வருகிறது.



2012-ம் ஆண்டு வெளியான 'ரவுடி ரத்தோர்' என்ற இந்திப்படத்தின் 'சிந்தா சிந்தா' பாடலில் விஜய் தன் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இது இந்தியில் விஜயின் முதல் படமாக அமைந்தது. இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி இரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது.




நடிப்பில் பிசியாக இருந்த விஜய் 2009-ம் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் ஏழை, எளிய மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்து வந்தார். இதனிடையே 2019,2020,2022-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் அறிவித்தார். அதில் இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றார்.

விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.



இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

இதில் பாபி தியோல் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மேற்கொண்டு தகவல்கள் குறித்து ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News