2024 ரீவைண்ட்: கோலாகலமாக நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்
- பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
- பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைப், கங்கனா ரணாவத் என திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
மறுநாள் முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முதல் ஒரு மாதத்தில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வந்த சூழலிலும், குளிரையும் பொருட்படுத்தாமல் ராமரை தரிசனம் செய்வதற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வந்தனர்.
ராமநவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது.
ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ராமர் மற்றும் சீதா என பெயரிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.