Recap 2024

2024 ரீவைண்ட்: 'எம்மா ஏய்'... வசனத்தால் ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்துவின் மரணம்

Published On 2024-12-17 02:14 GMT   |   Update On 2024-12-17 02:14 GMT
  • கடந்த 2008-ம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’, 2014-ம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கினார்.
  • தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தனது முத்திரையை பதித்தார்.

அனைவராலும் மறக்க முடியாத நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து காலமனார். 57 வயதான மாரிமுத்து டப்பிங் பணிக்காக சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

நடிப்பால் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த மாரிமுத்து தேனி மாவட்டம் வருஷநாடு பசுமலைத்தேரி கிராமத்தில் 1967-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பிறந்தார். இவர் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்துள்ளார். வாய்ப்புகளை தேடி ஆரம்பத்தில் ஓட்டலில் பணிபுரிந்த இவர் இலக்கியத்தின் மீது இருந்த ஆர்வத்தின் மூலம் பாடலாசிரியர் வைரமுத்து உடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் ராஜ்கிரனுடன் 'அரண்மனைக்கிளி', 'எல்லாமே என் ராசாதான்' படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.



மேலும் மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்', 2014-ம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கினார்.

இவ்விரு படங்களால் ஒரு இயக்குனராக பெரிய அளவில் வளர முடியவில்லை என்றாலும், தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தனது முத்திரையை பதித்தார். முதன் முதலில் இயக்குனர் மிஷ்கினின் 'யுத்தம் செய்' படத்தில் மாரிமுத்து நடிகராக அறிமுகமானார். அதேபோல 'வாலி', 'ஆரோகணம்', 'நிமிர்ந்து நில்', 'கொம்பன்', 'மருது', 'கத்தி சண்டை', 'தமிழில் பரியேறும் பெருமாள்', 'கார்பன்', 'எமன்', 'வீரமே வாகை சூடும்' போன்ற படங்களில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.



இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு 'எதிர்நீச்சல்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரில் அவரின் தனித்துவமான நடிப்பு திறமை, அவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது. தொடரில் வரும் எம்மா ஏய் அந்த வசனத்தின் மூலம் மிகவும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், இந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்', கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்2' ஆகிய படங்களில் மாரிமுத்து நடித்து இருந்தார்.

இதனிடையே தான், செப்டம்பர் மாதம் 8-ந்தேதி காலையில் சாலிகிராமத்தில் டப்பிங் பணிக்காக சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News