ரீவைண்ட் 2024: ஹர்திக் முதல் ஷஷாங்க் வரை.. உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்
- பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் முதலிடத்தில் உள்ளார்.
- 10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார்.
2024 முடிவடைந்து புதிய ஆண்டு (2025) விரைவில் பிறக்க உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 2 இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.
இந்த பட்டியலில் முதல் வீரராக பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்பவர் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
2-வது இடத்தில் முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியை தழுவினார். போட்டிக்கு முன்னர் எதிராளியை கண்ணத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3-வது இடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் உள்ளார். 17 வயதில் கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை யமால் முறியடித்தார். இவர் கோல் அடித்து கொண்டாடிய போது ரசிகர்களால் இனவெறி தாக்குதல் நடத்தினர். யுரோ கோப்பையை வென்ற அணியில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
4-வது இடத்தில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.
5-வது இடத்தில் மைக்கெல் டைசன் உடன் குத்துச்சண்டையில் மோதிய ஜேக் பால் (27) உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஆவார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனுக்கு எதிரான போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் டைசனை வீழ்த்தினார்.
6-வது இடத்தில் ஸ்பெயினின் கால்பந்து வீரர் நிகோ வில்லியம்ஸ் உள்ளார். இவர் லமைன் யமலுடன் இணைந்து, யூரோ 2024-ல் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.
ஜெர்மனியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றபோது, இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு வில்லியம்ஸ் முக்கியமான கோல்களை அடித்தார்.
7-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது நட்சத்திர ஆல்ரவுண்டராக கவனத்தை ஈர்த்தார்.
8-வது இடத்தில் அமெரிக்க கோல்ப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்லர் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு உலகின் அதிக ஊதியம் பெறும் கோல்ஃப் வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.
9-வது இடத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் பெயர் குழப்பத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சகர்களை தனது பேட்டிங்கின் மூலம் வாயடைக்க வைத்தார்.
அவரது பஞ்சாப் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக மாற்றியது. ஐபிஎல்லில் அவர் முக்கியத்துவம் பெறுவது அந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான கதைகளில் ஒன்றாகும்.
10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார். 2024-ம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார், இது கால்பந்து உலகில் விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியது. ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் இந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று பலர் கூறினர். இதனால் ரியல் மாட்ரிட் பலோன் டி'ஓர் விழாவை புறக்கணித்தது.
சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரோட்ரியின் அருமையான விளையாட்டு , இந்த சீசனில் அவர் செயல்ப்பட்ட விதம் அவரை பலோன் டி'ஓர் வெற்றியாளராக அவரது சாதனை கவனத்தை ஈர்த்தது.