2024 ரீவைண்ட்: ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு.. வங்கதேச வன்முறையும்.. சிறுபான்மையினர் மீதான வன்மமும்
- இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர்.
- சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் கொல்லப்பட்டார்
இட ஒதுக்கீடும் மாணவர்கள் போராட்டமும்
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு
இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.
இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர். வங்கதேச பிரச்சனையால் அங்கிருந்து சாறை சாரையாக மக்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதும், நிலைமையை சமாளிக்க அங்கு குவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறின.
முகமது யூனுஸ்
ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.
ஆனால் வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. சிறுபான்மையினரின் [இந்துக்களின்] வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன. அக்டோபர் தொடக்கத்தில் துர்கா பூஜை முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. இந்துக்கள் பரவி வாழும் இடங்களில் இன்றைய தேதியும் பதற்றமான சூழலே நிலவுகிறது.
சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு வெகு மக்கள் இடையே பரப்படுவதும், பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளாக தங்களை வரையறுத்துக்கொள்ள்ளும் மத அடிப்படைவாத அமைப்புகளும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமாக அமைகின்றன.
இதற்கு எதிராக இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தாமலும் இல்லை. அப்படி இந்துக்களை போராட்டங்களுக்கு தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த மதகுரு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
தற்போது அவருக்காக எந்த வக்கீலும் ஆஜராக முன்வராத நிலையில் அவரது ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியாவும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளன.
ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே வங்கதேச இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே வலியறுத்தி உள்ளார்.