null
2024 ரீவைண்ட்: தடை செய்யப்பட்ட எக்ஸ் தளம்.. எலான் மஸ்க்கும் பிரேசில் சட்ட சிக்கலும்..!
- ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
- நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளம் உள்ளது. டுவிட்டராக இருந்த நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றினார். இதோடு நிறுவனத்தில் ஏராளமானோரை பணி நீக்கம், நிர்வாக ரீதியில் ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
அதன்படி எலான் மஸ்க்-இன் நடவடிக்கைகளுக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில், 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.
பிரேசில் தடை:
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இதோடு, பிரேசிலில் 'எக்ஸ்' தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள 'எக்ஸ்' அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் 'எக்ஸ்' சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
எலான் மஸ்க் திட்டவட்டம்:
ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்தை முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் உத்தரவிட்டார்.
இதுதவிர, கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற தளங்களில் 'எக்ஸ்' செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் 'எக்ஸ்' செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தடை உத்தரவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று விமர்சித்தார். பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளானது.
அபராத சிக்கல்:
மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், எக்ஸ் நிறுவனம் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பிரேசில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது. இதைத் தொடர்ந்து தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் எக்ஸ் தளம் பிரேசில் நாட்டில் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தார். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் சேவைகளை பிரேசில் நாட்டில் மீண்டும் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.