2024 ரீவைண்ட்: குவைத் தீ விபத்து.. உயிரிழந்த இந்தியர்கள்
- உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
- மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த ஜூன் 12ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அமைந்துள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து பலரின் உயிரை பறித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. தீ விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் மீட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
உயிரிழப்பு:
தீ விபத்து தொடர்பான விசாரணையில் சார்ட் சர்கியூட் காரணமாவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு பேர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
கட்டிடத்தில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.
இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியானது. பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இழப்பீடு:
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதோடு 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த கேரளா மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்தது.
தீ விபத்தில் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்குதாக தெரிவித்தது.