ஒரே படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ்- ஆவேசம் இயக்குனர்கள்: எகிறும் எதிர்பார்ப்பு
- மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம்.
- ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
2024-ம் ஆண்டில் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம் ஆகிய படங்கள் மலையாளம் மற்றும் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை டைரக்டர் சிதம்பரமும் ஆவேசம் படத்தை டைரக்டர் ஜித்து மாதவனும் இயக்கினர்.
இதில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
இதேபோல ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படமும் பெரும் அளவில் இளைஞர்களை கவர்ந்த படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டைரக்டர் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன் இணைந்து புதிய மலையாள படம் ஒன்றை இயக்க உள்ளனர். ஜித்து மாதவன் கதையில் இந்த படத்தை சிதம்பரம் டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம், எடிட்டராக விவேக் ஹர்சன், ஒளிப்பதிவாளராக ஷைஜு காலித் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 2 வெற்றி இயக்குனரும் இணைந்து செயல்படுவதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.