தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி உலகளாவிய கவனத்தைப் பெறுவதைக் கண்டு பெருமை அடைகிறேன் - கெவின் வாஸ்
- ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கெவின் வாஸ்
- தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து உலகளவில் செல்வதை கண்டு பெருமை
ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் மற்றும் ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ் அவர்கள், மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் உரையாற்றிய போது, தென்னிந்திய ஊடகத்துறை பிராந்திய அளவில் இருந்து உலகளாவிய செல்வாக்கை பெற்ற வரலாற்றுப் பயணத்தை பற்றி பேசினார். இந்த கருத்தரங்கத்தின் "எல்லைகளை தாண்டி முன்னேறுதல்" என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தன் பயணத்தை நினைவுகூர்ந்த கெவின் வாஸ், "இந்த நிகழ்வு எனக்குப் பெரும் உற்சாகம் அளிக்கிறது. 2016ல் தென்னிந்தியாவில் ஸ்டார் டிவியின் வணிகப் பிரிவுகளை வழிநடத்தி என் பயணம் தொடங்கியது. இந்த சந்தைகளை நெருக்கமாக அனுபவித்தவராக, தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து தேசியம் வரை, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறுவதைக் கண்டு பெருமை அடைகிறேன்" என்றார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னேற்றம்
கொரோனா பிந்தைய காலகட்டத்தில், RRR, KGF-2, மற்றும் காந்தாரா போன்ற தென்னிந்திய படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அவர் சிறப்பித்தார். மேலும், "பொன்னியின் செல்வன்" மற்றும் "விக்ரம்" போன்ற தமிழ் படங்கள் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றதாகக் கூறினார்.
2024ஆம் ஆண்டிலும், "புஷ்பா 2" ஹிந்தி டப்பிங் மூலம் மட்டுமே ஹிந்தி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 20% அளவுக்கு பங்களித்ததையும், "மண்டேலா," "கடைசி விவசாயி," மற்றும் "சர்பட்ட பரம்பரை" போன்ற படங்கள் கதையின் ஆழத்தால் பாராட்டுப் பெற்றதையும் குறிப்பிட்டார்.
"தொலைக்காட்சி தற்போதும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் 30% மொத்த பகுதியைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளூர் மொழி உள்ளடக்கங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.