தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உலக தமிழர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது - நடிகர் சௌந்தரராஜா
- தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
- அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் அல்லாத மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகள் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் சௌந்தரராஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் தனது மண்ணும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுடன் நடிகர் சௌந்தரராஜா மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சௌந்தரராஜா, "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் அண்ணன் த.வெ.க. தலைவர் விஜய் வழியில் புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த நாளில் மரக்கன்றுகள் நட்டு, அன்னதானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை பொறுப்பாளர் பரத் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் வேலை பளு காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவருக்கும் அண்ணன் விஜய்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரிக்கு வருவதில் எப்போதும் மகிழ்ச்சி தான்.
2026 தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, கூட்டணி விவகாரங்கள் பற்றி கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பார்கள். நான் ஒரு தம்பி மற்றும் தொண்டனாக இருக்கிறேன். கட்சி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் பத்து நாட்களில் முடியும் என்று கேள்விப்பட்டேன்.
ஆரம்பத்தில் இருந்து அண்ணன் தளபதிக்காக பணியாற்றியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனால் இந்த விஷயத்தில் பலர் வருந்தும் படி எதுவும் நடக்கக்கூடாது என்பதில் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கவனமுடன் ஒவ்வொருத்தரையும் தேர்வு செய்து வருகிறார். இன்னும் 15 நாட்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நிறைவடையும் என்று கேள்விப்பட்டேன்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யை தமிழ் நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர் போடும் ஒரு எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவு கூட சில நொடிகளில் செய்தியாகி விடுகிறது. அண்ணன் விஜய்க்கு உலக தமிழர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. சமீபத்தில் நான் படித்த தகவலின் படி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டால் அதனை மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வருகின்றனர்.
இன்றைய ஆட்சியில் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. மக்கள் மாற்றத்தின் பக்கம் தான் உள்ளனர். உதாரணத்திற்கு மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தியதை விட தற்போது மின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 500 ரூபாய் செலுத்திய நிலையில் தற்போது 2500 முதல் 3000 வரை நானே செலுத்தி வருகிறேன். இது மட்டுமின்றி விவசாயிகள் பிரச்சினை உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எல்லாவற்றுக்கும் போராட்டம் தான் நடத்த வேண்டும் என்றில்லை. அகிம்சை வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்," என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.